Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் வசந்த் VS பொன்னார்..! ரேசில் அதிமுக..! கன்னியாகுமரி கள நிலவரம் என்ன..!!

Advertiesment
Kanniyakumari

Senthil Velan

, சனி, 13 ஏப்ரல் 2024 (10:04 IST)
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் நிலவரம் என்ன. வெற்றி கனியை பறிக்கப் போவது யார்? என்பதை தற்போது விரிவாக பார்க்கலாம்.
 
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் கடைசி தொகுதி தான் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி. முக்கடல்களும் சங்கமிக்கும் சமுத்திரத்துக்கும், மேற்குத் தொடர்ச்சி மலைக்கும் இடையிலான நிலப்பரப்புதான் கன்னியாகுமரி மாவட்டம். மாவட்டத்தின் 30 சதவிகித நிலப்பரப்பில் காடுகள் அமைந்திருக்கின்றன. வயல்வெளிகளும், தென்னை மரங்களும், வாழை, மரவள்ளிக்கிழங்கு போன்ற உணவுகளும், ரப்பர் மரங்களும், பூத்துக்குலுங்கும் மலர்களும் பரந்துகிடக்கும் விவசாய மாவட்டம்.

மலையில் விளையும் கிராம்பு, மிளகு, ஏலக்காய் போன்ற பணப்பயிர்கள் பலரின் வாழ்வாதாரத்துக்கு அடிப்படையாக விளங்குகின்றன. கணிசமான எண்ணிக்கையில் மீனவர்களும் வாழ்கிறார்கள். தமிழகத்திலேயே, அதிக அளவிலான அரசு ஊழியர்கள் இருப்பதும் இந்தத் தொகுதியில்தான்.
 
மீன்பிடித்தல், ரப்பர் பால் வடித்தல், தேன் உற்பத்தி, முந்திரி தொழிற்சாலை, விவசாயம் உள்ளிட்ட பல தொழில்களைக் கொண்டது இத்தொகுதி. இங்கு ரப்பருக்கு குறைந்தபட்ச ஆதாய விலையை நிர்ணயம் செய்ய வேண்டும், மத்திய - மாநில அரசுகளின் ரப்பர் தொழிற்சாலை, தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம், தென்னை வாரிய அலுவலகம், சுற்றுலாவை மேம்படுத்த கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்க வேண்டும், ஏ.வி.எம். கால்வாயை சீரமைத்து நீர்வழி போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்டவை நீண்டகால கோரிக்கைகளாக உள்ளது.
 
2009-ல் தொகுதி மறுசீரமைப்பின் போது கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டசபைத் தொகுதிகளைக் கொண்ட இத்தொகுதி, கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. முன்னதாக இத்தொகுதியில் இருந்த திருவட்டார் சட்டசபை நீக்கப்பட்டது.
 
காங்கிரஸ் ஆதிக்கம்:
 
1957 முதல் 2021 வரை நடைபெற்ற தேர்தல்களில், காங்கிரஸ் கட்சி 11 முறை, தமாகா மற்றும் பா.ஜனதா கட்சிகள் தலா 2 முறை, ஸ்தாபன காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திமுக ஆகிய கட்சிகள் தலா ஒரு முறை என வெற்றி பெற்றுள்ளன.
 
1967-ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் காமராஜர் தனது சொந்த ஊரான விருதுநகரில் தோல்வியைச் சந்தித்த போதும், இங்கு எம்பியாக இருந்த மார்சல் நேசமணி உயிரிழந்த நிலையில், 1969-ல் நாகர்கோவில் நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
 
அடுத்தபடியாக, 1971-ல் மீண்டும் இதே தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் காமராஜர் வெற்றி பெற்றிருந்தார். அனைத்து தொகுதிகளிலும் திமுக, அதிமுக உள்ளிட்ட மாநிலக் கட்சிகளுக்கு செல்வாக்கு நிறைந்துள்ள நிலையில், இந்த தொகுதி மட்டும் அதற்கு விதிவிலக்கு. காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளுக்கு இங்குள்ள மக்களிடம் செல்வாக்கு அதிகம்.
 
மொத்த வாக்காளர்கள்:
 
கடந்த ஜனவரி 2024ல் வெளியான இறுதி வாக்காளர் பட்டியலின் படி கன்னியாகுமரி தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 15.47 லட்சமாகும்.  இதில் ஆண்கள் 7.72 லட்சம் பேர், பெண்கள் 7.74 லட்சம் பேர் உள்ளனர்.
 
கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை கிறிஸ்தவ நாடார் 30.08%, இந்து நாடார் 29.38%, கிறிஸ்தவ மீனவர் 10.20%, தலித் கிறிஸ்தவர் 4.48%, இஸ்லாமியர்கள் 4.43%, இந்து நாயர்கள் 4.03%, இந்து ஆதிதிராவிடர் 2.29%, ஈழவர் மற்றும் பணிக்கர் 1.61%, கோனார் 0.42%, அருந்ததியர் 0.40% மக்கள் வசிக்கின்றனர். இது தவிர பிராமணர், முதலியார், பழங்குடியின காணி உள்ளிட்ட இன்னும் பிற சமுதாய மக்களும் பரவலாக வசிக்கின்றனர்.
 
2019 தேர்தல் நிலவரம்:
 
2019 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வசந்த குமார் இங்கு வெற்றி பெற்றார். பின்னர் அவரது மறைவை அடுத்து 2021 நடைபெற்ற இடைத்தேர்தலில் வசந்த குமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிட்டு வெற்றி பெற்றார். விஜய் வசந்த் 5,76,037 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் 4,38,087 வாக்குகள் பெற்றிருந்தார்.
 
2024 நடைபெற உள்ள பொது தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக சிட்டிங் எம்பி ஆன காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜய் வசந்த் மீண்டும் களம் இறங்கியுள்ளார். பாஜக சார்பாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுக சார்பாக பசிலியான் நசரத் போட்டியிடுகிறார்.
 
webdunia
விஜய் வசந்த் (காங்கிரஸ்):
 
எளிமையானவர் தான் விஜய் வசந்த். ஆனால், தொகுதியின் வளர்ச்சிக்காகப் பெரிதாக எதையும் அவர் செய்யவில்லை. அவர் பெயர் சொல்லும் அளவுக்கான திட்டங்களையும் கொண்டுவர வில்லை. மக்களின் கோரிக்கைகளை டெல்லியிலும், அதிகாரிகளிடமும் மனுவாக அளிப்பதைத் தவிர, அவர் வேறு எதையும் செய்யவில்லை. கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்தின் செயல்பாடுகளை இப்படித்தான் விமர்சிக்கிறார்கள் தொகுதி மக்கள். இருப்பினும் சிறுபான்மை சமூக வாக்குகள், திமுக கூட்டணி, தந்தை வசந்தகுமாரின் செல்வாக்கு ஆகியவை விஜய் வசந்த்திற்கு  கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.
 
webdunia
பொன்.ராதாகிருஷ்ணன் (பாஜக):
 
பாஜக சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், ஏற்கனவே எம்பியாக இருந்தபோது கொண்டு வந்த திட்டங்கள் அவருக்கு பிளஸ் ஆக அமையலாம். அதேபோல ஆளும் திமுக மீதான அதிருப்தி வாக்குகளை அவருக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. மத்திய அமைச்சராக இருந்தபோது, பல கோடிக்கணக்கில் நலத்திட்டங்களை கன்னியாகுமரிக்கு கொண்டு வந்ததாகவும், இதனால், தனக்கே மக்களிடையே ஆதரவு உள்ளதாகவும் கூறி தீவிரமாக பரப்புரை செய்து வருகிறார் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன். 
 
webdunia
பசிலியான் நசரத் (அதிமுக):
 
அதிமுக சார்பில் போட்டியிடும் பசிலியான் நசரத் மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் சிறுபான்மை சமூக வாக்குகளை அறுவடை செய்யலாம்.  காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகியோரை விடுத்து மக்கள் மாற்றத்தை விரும்புவதால், இம்முறை அதிமுகவிற்கே வெற்றி கிட்டும் என்ற குறிக்கோளோடு களம் காண்கிறார் அதிமுக வேட்பாளர் பசிலியான் நசரேத்.
 
2021-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இங்கு   எத்தனையோ வேட்பாளர்களுக்கும் தனித்தனியாக வாக்கு வங்கி இருந்தாலும், நடுநிலையாளர்களையும், இளம் தலைமுறையினரால் தான் வெற்றி தீர்மானிக்கப்படும். வரும் தேர்தலில் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் விஜய் வசந்த், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு இடையே தான் நேரடி போட்டி நிலவுவதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியை தீவைத்துக் கொளுத்திய முதியவர் தானும் தீயிட்டு தற்கொலை!