திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட லேப்டாப் திட்டம் அதிமுக ஆட்சிக்கு வந்த பின் தொடரும் என்று அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி அளித்துள்ளார்.
தேனி அதிமுக வேட்பாளர் நாராயணசாமிக்கு ஆதரவாக எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களை எல்லாம் திமுக அரசு முடக்கி விட்டதாக குற்றம் சாட்டினார்.
மாணவ, மாணவியர்களுக்கு 52 லட்சம் லேப்டாப்புகள் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டன என்றும் அந்தத் திட்டத்தை திமுக அரசு ரத்து செய்தது என்றும் எடப்பாடி புகார் தெரிவித்தார். திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட லேப்டாப் திட்டம் அதிமுக ஆட்சிக்கு வந்த பின் தொடரும் என்று அவர் உறுதியளித்தார்.
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த திமுக எதையும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், ஆனால் அதிமுக அரசு சட்டப் போராட்டம் நடத்தி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த நடவடிக்கை மேற்கொண்டது என்று தெரிவித்தார். விவசாயிகளையும், விவசாயத்தையும் அரவணைத்து சென்றது அதிமுக அரசுதான் என்று எடப்பாடி கூறினார்.
திமுக ஆட்சியில் விலைவாசிகள் உயர்ந்து விட்டதாக குற்றம் சாட்டிய அவர், குறிப்பாக அரிசி விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நாட்டு மக்களை மு.க ஸ்டாலின் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என்றும் அவர் கூறினார்.
14 ஆண்டுகளுக்குப் பிறகு பதவிக்காக ஒருவர் வந்துள்ளார் என பெயரை குறிப்பிடாமல் டிடிவி தினகரனை கடுமையாக சாடினார். மேலும் பாஜக குறித்து டிடிவி தினகரன் பேசிய காட்சிகளை திரையிட்டு பச்சோந்தி வேட்பாளரை புறக்கணிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டார்.