பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால் நட்சத்திரத் தொகுதியாக மாறியுள்ள கோவையில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் பந்தயத்தில் யார் முன்னிலையில் இருக்கிறார் என்பதை தற்போது விரிவாக பார்க்கலாம்.
தமிழ்நாட்டின் தொழில் நகரம், தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்ற பெருமைகளுக்கு சொந்தமான மாவட்டம் என்றால், அது கோவை தான். இது தமிழ்நாட்டிற்கு எவ்வளவு முக்கியமான மாவட்டமோ, அதே அளவு அரசியலிலும் முக்கியத்துவம் வாய்ந்தது கோவை மக்களவைத் தொகுதி.
நூற்பாலைகள், மோட்டார் பம்பு செட் தயாரிப்பு, இன்ஜினியரிங் உற்பத்தி பொருட்கள், கிரைண்டர் உற்பத்திக்கு பெயர் பெற்றது கோவை நகரம். சென்னைக்கு அடுத்தபடியாக கோவையிலும் ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ளன.
கோவை தெற்கு, வடக்கு, பல்லடம், சூலூர், கவுண்டம்பாளையம் மற்றும் சிங்காநல்லூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டது கோவை நாடாளுமன்றத் தொகுதி. இந்த தொகுதியில் கவுண்டர் சமுதாயத்தினர் 25% உள்ளனர். பட்டியல் இனத்தவர் 17 சதவீதமும், இஸ்லாமியர் 8 சதவீதமும், கிறிஸ்தவ மக்கள் 7 சதவீதமும் உள்ளனர்.
கடந்த ஜனவரி 2024 ல் வெளியான இறுதி வாக்காளர் பட்டியலின் படி கோவை நாடாளுமன்ற தொகுதியில் 20.83 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 10.30 பேர், பெண்கள் 10.52 லட்சம் பேர் உள்ளனர்.
இடதுசாரி கட்சிகள் ஆதிக்கம்:
தொழில் நிறுவனங்களையும், தொழிலாளர்களையும் அதிகம் கொண்ட மாவட்டம் என்பதால், இடதுசாரிகளின் கோட்டையாகவே விளங்கி வருகிறது கோவை மக்களவைத் தொகுதி. 1957 முதல் இதுவரை 17 முறை மக்களவைத் தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில், இடதுசாரி கட்சிகள் மட்டுமே 8 முறை வெற்றி பெற்றுள்ளன. அதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் ஐந்து முறை வென்றுள்ளன. பாஜக இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளது. பிரதான கட்சிகளான திமுக, அதிமுகவும் கோவை மக்களவைத் தொகுதியில் ஒருமுறை மட்டுமே வென்றுள்ளன.
2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பி.ஆர் நடராஜன் 5,71,150 வாக்குகள் பெற்று, 1.7 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் 3.92,037 வாக்குகள் பெற்று இரண்டாமிடம் பிடித்தார். மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மகேந்திரன் 1,45,104 வாக்குகளுடன் மூன்றாமிடம் பிடித்தார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கல்யாணசுந்தரம் 60,519 வாக்குகள் பெற்று நான்காமிடம் பிடித்தார்.
இந்த முறை கோவை தொகுதியில் திமுக போட்டியிடுகிறது. திமுக சார்பில் கணபதி ராஜ்குமார் களமிறக்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை களமிறங்கி இருப்பதால் தற்போது கோவை நட்சத்திர தொகுதியாக மாறி உள்ளது.
கணபதி ராஜ்குமார் (திமுக):
திமுக சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் கணபதி ராஜ்குமார், கோவை மாநகரின் 5வது மேயராக 2011 - 16 வரை இருந்தார். மேலும் அதிமுகவின் கோவை மாவட்ட செயலாளராகவும் இருந்துள்ளார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். செந்தில் பாலாஜி ஆதரவாளராக பார்க்கப்படும் கணபதி பி.ராஜ்குமாரை திமுக வேட்பாளராக தேர்வு செய்துள்ளது. அதிமுகவில் இருந்து வந்தவர் என்பதால் களப்பணியில் திமுகவினர் சுணக்கம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் திமுகவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், முஸ்லிம் அமைப்புகள், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளின் ஆதரவு உள்ளது.
சிங்கை ராமச்சந்திரன் (அதிமுக):
கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநிலத் தலைவராக இருந்து வருகிறார். இவருடைய தந்தையான சிங்கை கோவிந்தராஜ் 1991-ம் முதல் 1996-ம் ஆண்டு வரை கோவை மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.
இதன் காரணமாக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனுக்கு சிங்காநல்லூர் தொகுதியில் செல்வாக்கு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கோட்டை காரணமாக தனது செல்வாக்கைப் பயன்படுத்தி குறிப்பிடத்தக்க வாக்குகளை கவர வாய்ப்புள்ளது. மேலும் இந்த தொகுதியில் அதிமுகவுக்கு சிட்டிங் எம்எல்ஏக்கள் ஐந்து பேர் உள்ளதால் கோவை தொகுதி தங்கள் கோட்டை என்று அடையாளப்படுத்த அதிமுக இந்த வெற்றி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
அண்ணாமலை (பாஜக):
திமுக மற்றும் அதிமுகவிற்கு போட்டியாக களம் இறங்கும் அண்ணாமலை, தனது சொந்த தொகுதியான கரூர் மாவட்டத்தில் இருந்து விலகி கோவையில் போட்டியிடுகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அரவங்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார்.
இதனையடுத்து நாடாளுமன்ற தொகுதியான கோவைக்கு தற்போது மாறியுள்ளார். கோவையில் பல இடங்களில் பாஜக சார்பாக நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். மேலும் பிரதமர் வாகன பேரணியும் கோவையில் நடத்தி வாக்குகள் கவர்ந்துள்ளார். கோவை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பின் பாஜகவுக்கு சாதகமான தொகுதியாக மாறியுள்ள கோவையில் அண்ணாமலைக்கு ஆதரவு பெருகி வருகிறது. அண்ணாமலை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரத்தில் ஈடுபடும் பட்சத்தில் கூடுதல் வாக்குகளை பாஜக அறுவடை செய்ய வாய்ப்புள்ளது.
கோவை நாடாளுமன்ற தொகுதியில் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியை தவிர்த்து எஞ்சிய ஐந்து தொகுதிகளமே அதிமுக வசம் உள்ளது. திமுகவுக்கு இங்கு ஒரு எம்எல்ஏ கூட இல்லாததால் அதிமுகவுக்கு சாதகமான தொகுதியாகவே பார்க்கப்படுகிறது. மேலும் பாஜகவுக்கு இங்கு வாக்கு வாங்கி உள்ளதால் கோவையில் மக்களவைத் தொகுதியில் அதிமுக, பாஜக இடையேதான் போட்டி நிலவுகிறது. இருப்பினும் தொழில் நிறுவனங்கள் அதிகமாக உள்ளதால் தொழிலாளர்களின் வாக்குகள் எந்த அளவிற்கு யாருக்கு சாதகமாக செல்லும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.