Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரு மானுடத்தின் பிரதிபலிப்பு இந்தத் தனிமை - சிறப்புக் கட்டுரை

LITERATURE
, வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (19:38 IST)
நட்சத்திரங்களின் சிரிப்பில் நிலா குளிர்காய்வதுபோல் இந்தத் தனிமைப் பூவனத்தில் தான் என் கவிதைக் காற்று சுதந்திரமாக உலாவருகிறது.
 
ஏகாந்தத்தை ஏய்கிறவன் நானல்ல; ஆனால், ஏகாந்தத்தை ஏகபோகமாய்த் துய்ப்பவன்.
 
எனக்குண்டான கவலைக்கும் மகிழ்ச்சிக்குமான இடைவெளியை இந்த தனுமை தான் தன் மயிலிறகுபோன்ற நேரச்சிப்பந்திகொண்டு என்னை ராஜாவைப்போல் உணரவைக்கிறது.
 
கவிதை எழுதும் போது நானே ராஜா! எனக்கு நானே மந்திரி. என் விமர்சனத் தோட்டத்தில் முதல் கல் எரிவதும், முதல் பூச்செண்டை வாழ்த்துமடலாகத் தருவதுமான முதல் ரசிகன் நான் தான் என்பதால், இந்த எழுத்துப் பயணத்திற்கு எப்போதும், தனிமை ரயிலில் பயணிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.
 
அறியாமையில் இருந்து அறிவார்ந்த தன்மைக்கு வலியப் போகிற உலகில் ஏதுமில்லாத நிலையிலேயே தன்னைத் தோய்த்துக் கொள்பவன் ஒருவனும் இருக்க முடியாது.
 
என் தனிமைப்பூவனத்தில் உதிரும் நேரம் என்னால் என் எழுத்துச் செடியில் இருந்து பூவாகவோ, கனியாகவோ, விதையாகவோ இருக்கவே ஆசைப்படுகிறேன்.
 
தனிமையின் –மீதெனக்கு ஒருபோதும் வெறுப்பு வந்ததேயில்லை. ஏனென்றால் தனிமையை நேசிக்கத் தெரியாதவர்கள் எதிராளியின் மீதான வசவுகளைப் பேசுவது மாதிரி அதைக் குற்றஞ்சாட்டுவார்கள்.
 
ஆனால், தனிமைப்பூவனத்திற்குப் பாத்தியப்பட்டவர்கள் அதன் சுகமான நிழலில் தங்கித் தங்களைஅடுத்தகட்டப் பயணத்திற்காய் மேம்படுத்திக் கொள்வார்கள்.
 
'எத்தனை தனிமைகள் வாழ்க்கையிலுண்டு: பிள்ளைத் தனிமை, மாணவத் தனிமை, விடலைத் தனிமை, பருவத் தனிமை, காதல் தனிமை, வியாபாரத் தனிமை, எதிர்ப்புத்தனிமை, வெற்ப்புத்தனிமை, பிரச்சனை தனிமை, இழப்புத்தனிமை, முதுமைத் தனிமை, இற்ப்புத் தனிமை என்ற வாழ்வின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒருவித தனிமைப்பாத்தியத்திற்க்குள் தன்னை இருத்திக்கொள்கிறான்.
 
யார் மாறினாலும், இந்தத் தனிமைப் பூ வனத்திற்குள் இருந்து, வெளிவருகிறவர்கள் யாராயிருந்தாலும் சிறந்த பக்குவத்துடன் தன்னைத் தான் அறியும் பேரறிவுடன் திகழ்வார்கள்.
 
ஒருவன் தனிமையை நண்பனாகக் கருதினால், அதனுடன் யாரும் பேரம் பேசுவதில்லை; தனிமையின் ரசிகர்களாக இருந்தால் தனிமையை யாரும் தன் செயல்களால் தவிக்கவிடுவதில்லை.
பல காவியங்களும், சோதனைகளும் இந்தத் தனிமைத் திரைமறைவில்தான் அரங்கேறியிருக்கும் என கருத முடிகிறது..
 
''தனிமைக்குத் தன்னை ஒப்புக்கொடுத்தவர்கள், மிகச்சிறந்த அறிவாளி மற்றும் மேதையாகத்தான் இருக்க வேண்டியதில்லை. அவர்கள், ஹெலன் கெல்லர் போன்ற மாற்றுத் திறனாளிகளாகவும், பாரதியைப் போன்ற கவிஞனாகவும், கோடிகளில் சம்பளம் வாங்கும் சமூகத்தில் மிக உயர்ந்த அதிகாரிகளாகவும், பல அடுக்குமாடி வீடுகளைக் கொண்ட மிகப்பெரிய கோடீஸ்வரராகவும், உலகில் தனக்கென தனி சக்தி படைத்த ஒரு மதத் தலைவராகவும், ஏன் பல லட்சம் தொண்டர் படைகளைக் கொண்ட ஒரு அரசியல் தலைவராகவும், ஒரு நாட்டிற்கு அதிபராகவும், அடுத்த வேளைச் சோற்றிக்கு வழியென்னவென்று யோசிக்கும் ஒரு பரம ஏழையாகவும் இருக்கலாம் என்பது என் கருத்து.''
 
மேற்கூறிய எல்லா வகைகளையும் பகுத்துப்பார்த்து எழுத இந்தச் சமூகத்தை உற்றுப்பார்த்து, அதைத் தன் எழுத்தின் படைப்பாகக் கொண்டு வந்து இலக்கிய பீடத்தில் வாசிப்புப் பலியிட என்னைப் பொருத்தவரை ஒரு கலைஞனுக்கும் கவிஞனுக்கும் இந்தத் தனிமை என்பது மானுடத்தின் பிரதிபலிப்பு.
 
இறைவனும் இயற்கையும் கருத்துமுரண்பாடு இல்லாது ஏக மனதுடன் உலகில் இருக்க ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு மாபெரும் கருவிதான் இந்தத் தனிமை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏழைகளைத் துரத்தும் வறுமை…அதை விரட்டும் வழி என்ன?