எதுவும் புரியாமலில்லை..எதுவும் தெரியாமலில்லை -சிறப்பு கட்டுரை
, வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (18:56 IST)
என்றைக்கோ நமக்கு நடந்த சம்பவங்கள் இந்த மூளைப் பந்தில் தொற்றிக்கொண்டு அந்த ஞாபகக் கறையாக மாறும்போது, எப்படி அதைச் சலவைத்தூள் கொண்டு போக்க முடியும்?
நமக்கான வாழ்க்கையில் நமக்கான பாதையில் செல்லும்போது, எத்தனையோ தடைகளும், சூழ்ச்சிகளும் நமக்கு ஏற்படாமல் போகாது. இந்த உலகில் எல்லாம் மாயை என்று தள்ளி வைக்கவும் முடியாது; நடப்பது எல்லாம் நிதர்சனம் என்று ஏற்றுக் கொள்ளவும் முடியாது.
வாழ்க்கை என்பது ஒரு துணிபோன்று கிழித்தெறிவதில் அர்த்தமில்லாததாகும். வாழ்க்கையென்பது ஒரு போர்க்களம் என்றால் அதில் ரத்தமும், களறியும், எதிரிகளும், பகையும் அதிகரித்துக் கொண்டே போகும். அங்கு வெற்றியென்பது மற்றவர்களை வீழ்த்துவது என்றும், தோற்பது என்பது அவமானத்திற்குரியது என்றும் நமக்குள் விதைக்கப்படும்.
மனிதனின் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேபோகிறது. தேவைகள் சுருங்கும்போது, அவனுக்கான செலவுகளும், அதற்காக அவன் உடல் என்ற இயந்திரத்தை ஓயாது உழைப்பு எனும் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு, தன் திறமையெனும் ஆற்றல் எனும் சக்தியை அனாவசியமாக இறைக்கத் தேவையிருக்காது.
நம் வாழ்க்கையில் வாழ்க்கையின் ஆதாரப்பரிசாக வெற்றியைத் தீர்மானிக்கையில், முதலும் முடிவுமாக வெற்றி தோல்வியே பரிசீலிக்கப்படும். இதனால், சக உயிர்களிடத்தில் தோன்றும் ஒரு மனிதாபிதாபிமானம் என்பது அங்கு பழுதான இயந்திரம்போல் தொய்வைச் சந்திக்கும் என்பது என் கருத்து.
இடைவிடாத தொடரோட்டத்தில் அந்த நதி எங்கு ஓய்வெடுக்கிறதென யாராலும் ஆராய முடியாது. ஒரு மலையுச்சியில் உள்ள பல ஆண்டுகளாகக் கிளைவிரித்திருக்கும் புல்பூண்டுகளின் அடிவேரில் இருந்து சேமிக்கப்பட்டு, அது, கீழாக பகுதியை நோக்கி நெருங்கி நெருங்கி வந்து, இடிபாடுகளுடைய பாறைகள் மீது அருவியாய்ப் பாய்ந்து; அந்த அருவிகள் கிளை நதிகளில் சங்கமித்து, அந்த கிளைகள் ஒன்றாய்க் குழுமி, ஓர் பிரதான நதியோடு ஐக்கியமாகி, அந்த ஜீவ நதி போகிற வழியேங்கும் வளத்தை உருவாக்கிக்கொண்டு, ஓரு பேரிறைக் கடலில் கலக்கிறது..
வாழ்க்கையில் வளமென்ற காலமும் இருக்கும்போது, வளமில்லாத காலமென்ற ஒன்றிருக்குமென்பதை யாரால் மறுக்கமுடியாது.
பல நாட்களாகப் பட்டினித் தவமிருக்கும் காக்கைக்கு ஒரு மாமிசத்தைப் படையலாக ஒரு மனிதன் போட்டாலென்ன? ஒரு மிருகம் போட்டாலென்ன? அதன் சகப் பறவை போட்டாலென்ன?
வெற்றிடமென்ற என்று எங்குமில்லை; எதிலுமில்லை. ஊசியின் நுனி நாக்கிலும் கோடி பாக்டீரியாக்கள் குவிந்துள்ளது.
அதுபோல் ஓருலகில் உள்ள பல பகுதிகளில், பல கண்டங்களில், பல ஊர்களில் பல தேசங்களின் வாயிலாக மக்கள் பிரிந்திருந்தாலும்கூட, மக்கள் என்ற ஓரினமாக ஒன்றிணையும்போது, ஒட்டுமொத்த சமூக இனத்திற்குள் நிலவும் பிரிவுகள் மடியும். அங்கு சமத்துவம் தலையானதாக கருதப்படும்.
கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தவர் இனவெறி காரணமாக ஒரு போலீஸ்காரரால் கொல்லப்பட்டார். இது உலகம் முழுவதும் பேசுபொருளானது. அந்தக் காவலருக்கும் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
உலகில் நாம் இருப்பது கொஞ்ச காலமெனும்போது, தேவையில்லாதவற்றில் கவனம் குவித்து இருக்கும் நிம்மதியைக் கெடுத்துக் கொள்வதற்குப் பதிலாக, இருப்பதை வைத்து திருப்தி காணுகிறவர்களாகவும், அன்னை தெரசாபோல், உலக உயிர்களின் பேதம் காணாமல் நேசிப்பவர்களாகவும் மாறத் தொடங்கும் போது, உள்ளமென்ற ஓர் அமைப்பு நம் அன்பைப் பார்த்து நமக்கொரு அமைதிக்கான பரிசை நாமே வியக்குபடி கொடுக்கும்.
அப்படில் நமக்கெதிரான சிலவற்றைச் சகித்துக்கொள்ள சில ஆண்டுகளும், காலனும் பிடிக்குமென்றாலும், ஒரு பக்குவத்தை வளர்த்தெடுக்க நமக்குத் தேவை இன்றைய காலத்தில் அன்பும் கட்டுப்பாடற்ற சகோதரத்துவமும்தான்.
தென்னாபிரிக்காவில் 27 ஆண்டுகளை தன் ஆயுட்காலத்தில் சிறைச்சாலைப் பிடியில் அவதிப்பட்ட மண்டேலா, காந்தியின் கொள்கையை மனதில் வாங்கி, சிறையில் இருந்து வெளியில் வந்து அதைத் தன் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தியவர் மண்டேலா. அதனால், தான் பிறந்த தேசத்திற்குச் சிறையில் நெடுங்காலம் தொடர்புகொண்டிருந்த போதிலும் அவரால் முதல் கறுப்பின அதிபராக முடிந்தது.
இதையே நமக்கு முன்னோடிகளும் தம் வாழ்க்கையில் மூலம் நமக்குக் கூறியுள்ளனர். தஞ்சை மன்னன் தன் அரசவைக்கு வரும்படி அழைத்தபோதிலும் பணத்தைப் ஒரு பொருட்டென எண்ணாமல், இறைவன் மீதுள்ள பக்தியால் வரமறுத்து, ராமனை தொழுது போற்றிப்பாடுவதை தன் தவமெனச் செய்து, தன் கீர்த்தனைகளை 'ராம பஜனை' என்று கூறிய தியாகராஜரின் மேன்மையை இன்று அவரது கீர்த்தனைகளைப் பாடுவோரும் பெருமையுடன் கூறுவர். உப நிஷத்து கருத்துகள் நேர்த்தியாக விழுந்த அவரது கீர்த்தனைகளில் இருந்துதான் கர்னாடக சங்கீதத்திற்காக ஒரு செழுமை கிடைத்தது என்பது வரலாறு.
எந்தச் சூழ் நிலையிலும் தன் நோக்கத்தைச் சிதையவிடாமல், தான் பிடித்த கொள்கையை நேர்மையுடன் செயல்படுத்திக் காட்டுயவர்களின் வாழ்க்கையில் எப்போதும் வரலாறே வாகை சூடி வாழ்த்தும் என்பது திண்ணம்.
இதை ஏற்றுக்கொள்வது கடினமென்றாலும், அதுதான் நம்மை நாம் முழுவதும் உணர்ந்துகொள்வதற்காக ஒரு வாய்ப்பாக அமையும் என்பது என் கருத்து.
அடுத்த கட்டுரையில்