இந்தியாவில் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருவதால் வோட்ஃபோன் சேவை நிறுத்தப்போவதாக வெளியான செய்திகள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன!
இந்தியாவில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபட்டு வரும் நிறுவனம் வோடஃபோன். ஆரம்பத்தில் ஹட்ச் என்ற பெயரில் செயல்பட்டு வந்த டெலிகாம் சேவையை லண்டனை சேர்ந்த வோடஃபோன் நிறுவனம் வாங்கியது.
ஜியோவின் வருகைக்கு பிறகு முதன்மையான நிறுவனங்களான ஏர்செல், ஏர்டெல், வோடஃபோன் போன்ற நிறுவனங்கள் பலத்த வீழ்ச்சியை சந்தித்துள்ளன. சமீபத்தில் தொடர் வீழ்ச்சியின் காரணமாக ஏர்செல் நிறுவனம் திவாலானது. அதைத் தொடர்ந்து இந்திய தொலைத்தொடர்பு கூட்டமைப்பில் உள்ள ஏர்டெல், ஐடியா, வோடஃபோன் மற்றும் பிற நிறுவனங்கள் தங்களை பலப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்ந்தன.
ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு கூட்டமைப்பில் இல்லாததால் விதிமுறைகள் ஏதுமின்றி சலுகைகள் அளித்து வருகின்றனர். மேலும் தற்போது வோடஃபோன் அரசுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால் இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலை குறித்து விரிவான அறிக்கையை மத்திய அரசுக்கு தொலைத்தொடர்பு கூட்டமைப்பு அளித்துள்ளது.
அதை ஏற்று அரசு கூட்டமைப்பு நிறுவனங்களுக்கு தளர்வுகள் வழங்காத பட்சத்தில் வோடஃபோன் தனது நிறுவனத்தை இந்தியாவில் இழுத்து மூட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இது வோடஃபோன் பணியாளர்கள் மற்றும் பயனாளர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வோடஃபோனிடம் இருந்தது வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.