ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் தங்கள் நிலுவை தொகை குறித்து அரசுக்கு அனுப்பிய பதிலுக்கு, தாமாக குறுக்கே வந்து பதில் அளித்துள்ளது ஜியோ.
ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் கட்டாமல் நிலுவையில் உள்ள தொகையை செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு விளக்கம் அளித்து தொலைத்தொடர்பு சேவைகள் கூட்டமைப்பு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
அந்த கடிதத்தில் ”ஏர்டெல், வோடஃபோன் மற்றும் ஐடியா ஆகிய நிறுவனங்களுக்கு நிதி உதவி அளிக்க வேண்டி அரசு இதில் தலையிடவேண்டும். இல்லையென்றால் முதலீடுகளும், வருவாயும் பெருமளவில் பாதிக்கப்படும். சேவைகள் தரம் பாதிக்கப்படும். இதனால் சில நிறுவனங்கள் மட்டுமே ஏகபோகம் அனுபவிக்கும் நிலை உண்டாகலாம்” என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த கடிதத்தின் சாரம் அறிந்த ஜியோ நிறுவனம் தங்களைதான் ஏகபோகமாக இருப்பதாக குறிப்பிட்டிருப்பதாக எண்ணி பதிலுக்கு, தொலைதொடர்பு சேவைகள் கூட்டமைப்புக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் ”தொலைத்தொடர்பு கூட்டமைப்பு இப்படி கடிதம் எழுதுவது அந்த இரு நிறுவனங்களுக்கு ஒலிப்பெருக்கியாக வேலை செய்வது போல உள்ளது. அரசுக்கு உரிய தொகையை செலுத்த முடியாத அளவுக்கு அந்த நிறுவனங்கள் பற்றாக்குறையில் இல்லை. அவர்கள் நஷ்டமடைந்தார்கள் என்றால் அது அவர்களது தவறான பொருளாதார கொள்கைகளால்தானே தவிர அரசால் அல்ல. இதில் அரசிடம் நிதி கேட்பது நியாயமில்லை” என்று கூறியுள்ளது.
இந்த இரு கடித சண்டைகளால் ஜியோவுக்கும், தொலைதொடர்பு கூட்டமைப்புக்கும் விரோத போக்கு இருப்பது பட்டவர்த்தனமாக வெளியே தெரிந்துவிட்டதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.