திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான இலவச டோக்கன்கள் வழங்கும் நடைமுறையில் திருப்பதி தேவஸ்தானம் முக்கிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது.
இதன்படி, முன்பு நடைமுறையில் இருந்த குலுக்கல் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இனிமேல், அங்கப்பிரதட்சணம் செய்வதற்காக ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களில் முதல் 750 பேருக்கு மட்டுமே டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படும். இந்த டோக்கன்கள் மூன்று மாதங்களுக்கு முன்பே ஆன்லைனில் வெளியிடப்படும். எனவே, பக்தர்கள் 'முதலில் வருபவருக்கே முன்னுரிமை' என்ற அடிப்படையில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
நேற்றைய நிலவரப்படி திருப்பதியில் 61,718 பக்தர்கள் தரிசனம் செய்தனர்; உண்டியல் காணிக்கை ரூ. 3.52 கோடி வசூலானது. இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்துள்ளனர்.