மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூல திருவிழாவின் முக்கிய நிகழ்வான 'பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல்' நிகழ்ச்சி, இன்று அதாவது செப்டம்பர் 3ஆம் தேதி நடைபெற்றது. இந்த திருவிழா கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த நிகழ்ச்சிக்காக சுந்தரேசுவரர் மற்றும் மீனாட்சி அம்மன் வெள்ளி சிம்மாசனத்தில் புறப்பட்டு, நான்கு சித்திரை வீதிகள் வழியாகப் புட்டுத்தோப்பு மண்டபத்திற்கு வந்தனர். அங்கு மதியம் 1.35 மணி முதல் 1.55 மணிக்குள் 'பிட்டுக்கு மண் சுமந்த லீலை' நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், மண் சுமந்த திருக்கோலத்தில் சுந்தரேசுவரர் பக்தர்களுக்குக் காட்சி அளித்தார். அப்போது, அவர் பிரம்படி வாங்கும் காட்சியும், மண் சாற்றுதல் நிகழ்வும் அரங்கேற்றப்பட்டன. வழக்கமாக, இந்தப் புட்டு திருவிழாவில் பக்தர்களுக்குப்பிரசாதமாகப் புட்டு வழங்கப்படுவது ஒரு சிறப்பு அம்சமாகும்.
வரலாற்றுப்படி, வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியபோது, அதைத் தடுக்க ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒருவர் மண் சுமக்க வேண்டும் என மன்னன் உத்தரவிட்டார். அப்போது, பிட்டு விற்கும் 'வந்தி' என்ற மூதாட்டிக்கு உதவ, இறைவன் கூலி ஆளாக வந்து, இறுதியில் பிரம்படிபட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், இந்த விழா நடைபெறுகிறது.