Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குழந்தை வரம் அருளும் ‘குளத்துப்புழா பாலகன்’ ஐயப்பன் கோவில்! – சுவாமி ஐயப்பனின் அறுபடை வீடுகள்!

Kulathupuzha Balagan
, வெள்ளி, 1 டிசம்பர் 2023 (10:02 IST)
ஆறு விதமான நிலைகளில் ஐயப்பன் தரிசனம் தரும் அறுபடை வீடுகளில் முதல் வீடான குளத்துப்புழா பாலகன் ஐயப்பன் கோவில் பல்வேறு சிறப்புகளை வாய்ந்தது.



முருக பெருமானுக்கு அறுபடை வீடுகள் உள்ளதுபோல மனிதனின் ஆறு கால கட்டங்களை விளக்கும் வகையில் சாஸ்தாவான ஐயப்ப சுவாமிக்கும் அறுபடை வீடுகள் உள்ளன. அதில் குழந்தையாக ஐயப்பன் சுவாமி காட்சி தரும் ஸ்தலம்தான் குளத்துப்புழா ஐயப்பன் திருக்கோவில். இந்த கோவிலில் சுவாமி ஐயப்பன் பாலகனாக காட்சி அளிப்பதால் “குளத்துப்புழா பாலகன்” என்றும், “பால சாஸ்தா” என்றும் அழைக்கப்படுகிறார்.

இந்த பால சாஸ்தா கோவிலில் கருவறை வாயில் குழந்தைகள் மட்டுமே செல்ல முடியும் அளவுக்கு மிகச்சிறியதாக உள்ளது. மூலவர் சன்னதியில் பால சாஸ்தா எட்டு கற்களாக காட்சி தருகிறார். பரசுராமர் நிறுவிய குளத்துப்புழா பாலகன் திருவுருவை பின்னாளில் அறியா வண்ணம் சிலர் எடுத்து உடைத்து விட அது எட்டு துண்டுகளாக உடைந்து ரத்தம் பீறிட்டதாம். அது பால சாஸ்தா என்பதை உணர்ந்த அவர்கள் பின்னர் அங்கேயே அவருக்கு கோவில் அமைத்து வழிபட்டு வருகிறார்கள். முக்கிய தினங்களில் எட்டு கற்களும் ஒன்றாக இணைக்கப்பட்டு பால சாஸ்தாவுக்கு பூஜைகள் நடைபெறுகின்றன.

விஜயதசமி நாளில் இஸ்தலத்தில் நடைபெறும் ’வித்யாம்பரம்’ நிகழ்வு புகழ்பெற்றது. பள்ளியில் சேர உள்ள குழந்தைகளுக்கு அந்நாளில் இங்கு எழுத்து பயிற்சி தரப்படுகிறது. இக்கோவில் வளாகத்தில் நாகராஜர், யட்சி, சிவபெருமான், விஷ்ணு, கணபதி, பூதத்தான் மற்றும் மாம்பழத்துறை அம்மனுக்கும் சன்னதிகள் உள்ளன.

webdunia


யட்சி அம்மன் சன்னதி முன்பு தொட்டில் கட்டி வேண்டினால் குழந்தை பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். நாகதோஷம் நீங்க பலரும் இஸ்தலத்தின் நாகராஜர் சன்னதியில் விளக்கேற்றி வேண்டுகிறார்ஜ்கள். ஸ்தலத்தின் அருகே உள்ள கல்லடையாற்றில் மீன்களுக்கு பொரி வாங்கி உணவளித்தால் தீராத நோய்களும் தீரும் என்பது ஐதீகம். பால சாஸ்தா மீது காதல் கொண்ட மச்ச கன்னியும், அவரது தோழியரும் கல்லடையாற்றில் மீன்களாக உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டின் செங்கோட்டையில் இருந்து 50 கி.மீ தொலைவிலும், திருவனந்தபுரத்தில் இருந்து 64 கி.மீ தொலைவிலும் உள்ளது இந்த குளத்துப்புழா. தினசரி காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனத்திற்காக கோவில் திறக்கப்படுகிறது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேது தோஷம், நாக தோஷம் போக்கும் சதுர்த்தி விரதம்!