பண்டைய காலத்தில், நாகத்தின் விஷம் கலந்த கஞ்சியால் உயிரிழந்த தனது ஏழு அண்ணன்களை காப்பாற்ற, ஒரு தங்கை இறைவனை வேண்டினாள். சிவனும் பார்வதியும் தோன்றி, கருட பஞ்சமி அன்று நாகருக்கு பூஜை செய்து, புற்று மண்ணுடன் அட்சதையை அண்ணன்கள் முதுகில் குத்த சொல்ல, அவர்கள் உயிர் பெற்றனர். இன்றும் கருட பஞ்சமி அன்று பெண்கள் உடன் பிறந்தோரின் முதுகில் அட்சதை இட்டு, சீர் பெறுவது இந்த நிகழ்வின் பிரதிபலிப்பாகும்.
வளர்பிறை பஞ்சமியில் கருடனுக்குரிய விரதத்தை கடைபிடிக்க வேண்டும். அதிகாலையில் குளித்து, தூய்மையான ஆடைகள் அணிந்து, ஐந்து நிற கோலமிட்ட தூய்மையான இடத்தில், அரிசியின் மீது பாம்பின் வடிவத்தை வைத்து, கவுரிதேவியுடன் பூஜை செய்ய வேண்டும். மஞ்சள் சரட்டைச் சாற்றி செய்யப்படும் இந்த பூஜை, நாக தோஷத்தைப் போக்கி, சகல செல்வங்களையும் அளித்து, முக்திக்கு வழி வகுக்கும்.
விரதம் இருக்கும் பெண்கள், பூஜை முடிந்ததும் விண்ணில் கருடனை தரிசிக்க வேண்டும். கருட தரிசனம் கிடைக்காதவர்கள் மறுநாள் தான் விரதத்தை முடிக்க வேண்டும். பூஜை முடிந்ததும் தானம் செய்வது பண வரவை அதிகரிக்கும்.