வருடத்தின் மூன்று முக்கியமான கார்த்திகை தினங்களில், ஆடி கிருத்திகையும் ஒன்று. முருகப் பெருமானுக்கு மிகவும் உகந்ததாக இந்நாள் கருதப்படுகிறது. தை மற்றும் கார்த்திகை மாதங்களில் வரும் கிருத்திகைகளை விட ஆடி கிருத்திகை தனிச் சிறப்பு பெறுகிறது.
ஆடி மாதம் தட்சணாயன காலத்தின் தொடக்கம் என்பதால், இது அனைத்து இறை வழிபாடுகளுக்கும் ஏற்றதாக உள்ளது. தை மாதக் கிருத்திகையை விட ஆடிக் கிருத்திகையே சிறப்பாகப் போற்றப்படுகிறது. இந்த மாதத்தில் இருந்து ஆறு மாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து, தை மாத கார்த்திகையில் விரதத்தை முடிக்கும் வழக்கம் உள்ளது.
ஆடிக் கிருத்திகை அன்று பெண்கள் விரதம் இருந்து முருகனை வழிபட்டால், வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. முருக பக்தர்கள் புண்ணிய தீர்த்தங்களில் நீராடி வழிபடுவார்கள். குறிப்பாகப் பழனியில் பக்தர்கள் சண்முகா நதியில் நீராடி விரதத்தைப் பூர்த்தி செய்வார்கள். காவடி எடுத்தும் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவார்கள். அனைத்து முருகன் தலங்களிலும் ஆடிக் கிருத்திகை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
திருத்தணியில் ஆடிக் கிருத்திகை அன்று தெப்ப உற்சவம் தொடங்குகிறது. அரக்கர்களை அழித்து முருகன் ஓய்வெடுத்த திருத்தலம் என்பதால், திருத்தணியில் அன்று சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.