ஓம் என்கிற பிரணவ மந்திரத்தை தொடர்ந்து உச்சரிப்பவர்களுக்கு அனைத்து வினைகளும் நீங்கி நன்மைகள் உண்டாகும். முழுமுதற்கடவுளாக வழிபடும் விநாயகப்பெருமான் அந்த பிரணவ மந்திரத்தின் வடிவமாகவே இருக்கிறார்.
பலரின் விருப்பத்திற்குரிய இஷ்ட தெய்வமாக இருப்பவர் விநாயகப்பெருமான். அனைவரும் எளிதாக வழிபடக்கூடிய ஒரு தெய்வமாகவும், அதே நேரத்தில் பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவராகவும் விநாயகர் இருக்கிறார்.
நன்மைகள் அனைத்தையும் வழங்கும் தெய்வமாக இருக்கும் விநாயகரை வழிபட சிறந்த தினம் மாதந்தோறும் வருகின்ற சதுர்த்தி தினமாகும்.
விநாயகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும் சதுர்த்தி விரதம் மிகவும் சிறப்பானது. சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.
விநாயகரின் திருவுருவம் விலங்கு, பூதம், மனிதன், தேவர் என்கிற நான்கின் இணைப்பாக காட்சி தருகிறது. அதாவது இவருடைய யானைத் தலை, செவி, தும்பிக்கை - விலங்கு வடிவமாகும். பேழை வயிறு, குறுகிய கால்கள் - பூத வடிவமாகும். புருவம், கண்கள் - மனித வடிவமாகும். இரண்டிற்கும் மேற்பட்ட கைகள் - தேவ வடிவமாகும்.
சதுர்த்தியன்று அதிகாலை நீராடி, உணவு உட்கொள்ளாமல் மாலை வரை கணநாதன் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும். முழுநேரமும் விரதம் இருக்க முடியாதவர்கள் பால் மற்றும் பழத்தை சாப்பிடலாம். சதுர்த்தி அன்று மாலை ஆலயத்திற்கு சென்று விநாயகப்பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்து கொள்ள வேண்டும்.