திடீரெனக் கடினமான அல்லது மிக கடினமான உடற்பயிற்சிகளை நீண்ட நேரம் செய்யும்போது, சிலருக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இது மிகவும் அரிதாக நிகழக்கூடியதுதான். எனினும், ஏற்கனவே இதய நோய், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், அதிக உடல் எடை, சீரற்ற இதயத் துடிப்பு அல்லது இதயத் தசை பலவீனம் உள்ளவர்கள் இதுபோன்ற தீவிரப் பயிற்சிகளில் ஈடுபடும்போது, மாரடைப்பு வரக்கூடும்.
தீவிர உடற்பயிற்சியின்போது இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம், அட்ரினலின் சுரப்பு ஆகியவை அதிகரிக்கலாம். இதனால், ரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் கொழுப்பு, வெடித்து, ரத்தக் குழாய்களை முழுமையாக அடைத்து மாரடைப்பை ஏற்படுத்தலாம். சில சமயங்களில், இதயத்தின் இயல்பான மின்னோட்டத்தில் ஏற்படும் தொந்தரவுகளும் மாரடைப்புக்கு வழிவகுக்கலாம்.
கடினப் பயிற்சிகளின்போது, பொட்டாசியம், மெக்னீசியம், சோடியம் போன்ற தாது உப்புகள் உடலில் கூடியோ, குறைந்தோ சமநிலையை இழக்கலாம். இதுவும் இதயத்தைப் பாதித்து உடனடி மாரடைப்பை ஏற்படுத்தலாம்.
எனவே கடினப் பயிற்சிகளை மெதுவாகத் தொடங்கி, படிப்படியாக நேரத்தை அதிகரிக்க வேண்டும். பயிற்சிக்கு முன் 'வார்ம் அப்' செய்வது அவசியம்.
பயிற்சிக்கு முன்னும் பின்னும், இடையிலும் நீர் அருந்தி, உடலின் நீர்ச்சத்தை பராமரிக்க வேண்டும். பயிற்சியின்போது நெஞ்சு வலி, மூச்சுத்திணறல், மயக்கம், அதிக வியர்வை, தோள்பட்டை, இடது கை, கழுத்து, தாடை, முதுகுப் பகுதியில் வலி ஏற்பட்டால், உடனடியாகப் பயிற்சியை நிறுத்திவிட்டு மருத்துவரை அணுக வேண்டும்.