திருநெல்வேலியில் இலவச வீட்டு மனைப் பட்டா அல்லது அரசு வீடுகள் கோரி திருநங்கைகள் நடத்திய போராட்டம் பரபரப்பானது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருநெல்வேலி–திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் குறை தீர்க்கும் முகாம் உட்பட பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்து அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
போராட்டத்தின் உச்சமாக, பங்கேற்ற ஒரு திருநங்கை திடீரென எழுந்து தாமிரபரணி ஆற்றுப் பாலம் நோக்கி ஓடி, ஆற்றில் குதிக்க முயன்றார். அங்கு செய்தி சேகரித்து கொண்டிருந்த பத்திரிகையாளர்கள் உடனடியாக அவரை துரத்திச் சென்று, சரியான நேரத்தில் பிடித்து இழுத்து, பெரும் துயர சம்பவத்தைத் தடுத்தனர்.
பிறகு, ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வெளியேற முயன்ற மாவட்ட ஆட்சியரின் வாகனத்தை மறித்து, திருநங்கைகள் அவரிடம் கோரிக்கை விடுத்தனர். இதனால், ஆட்சியர் வாகனத்திலிருந்து இறங்கி வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். திருநங்கைகளின் வீட்டு வசதி கோரிக்கைகள் குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் உறுதியளித்ததை தொடர்ந்து, போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.