நேற்றைய ப்ளே ஆஃப் போட்டியில் ஆர்சிபி தோல்வியடைந்த நிலையில் ஆர்சிபிக்காக தொடர்ந்து விளையாடுவேன் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
அரபு அமீரகத்தில் பரபரப்பாக நடந்து வந்த ஐபிஎல் போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இதில் முந்தைய போட்டியில் வென்று சிஎஸ்கே நேரடியாக இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் நேற்று நடந்த ப்ளே ஆஃப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதிக் கொண்டன.
முதலில் பேட்டிங் செய்திருந்த ஆர்சிபி 138 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சேஸிங்கில் இறங்கிய கொல்கத்தா அணி கடைசி ஓவருக்குள் 139 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. விராட் கோலி ஆர்சிபியின் கேப்டனாக பங்கேற்கும் கடைசி போட்டி இது.
இந்நிலையில் போட்டிக்கு பிறகு பேட்டியளித்த விராட் கோலி “இளைஞர்கள் நம்பிக்கையுடனும், முழு சுதந்திரத்துடனும் விளையாடுவதற்கு தேவையான சூழலை உருவாக்குவதற்கு நான் என்னால் முடிந்த சிறந்ததைக் கொடுக்க முயற்சித்துள்ளேன். என்னால் முடிந்த சிறப்பான எல்லாத்தையும் அணிக்காக செய்துள்ளேன். அணியின் கேப்டனாக 120 சதவீதம் என் திறனை வெளிப்படுத்தியுள்ளேன். இனி கேப்டனாக இல்லாவிட்டாலும் கிரிக்கெட் வீரராக ஆர்சிபிக்காக தொடர்ந்து விளையாடுவேன். ஐபிஎல்லில் உள்ளவரை ஆர்சிபிக்காக மட்டுமே விளையாடுவேன்” என உறுதியாக தெரிவித்துள்ளார்.