நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியை மிக எளிதாக வீழ்த்தியது பஞ்சாப் அணி. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 171 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் நிக்கோலஸ் பூரன் 44 ரன்களும், ஆயுஷ் பதோனி 41 ரன்களும் சேர்த்தனர். கேப்டன் ரிஷப் பண்ட் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2 ரன்கள் மட்டுமே சேர்த்து அவுட்டானார்
அதன் பின்னர் ஆடிய பஞ்சாப் அணி 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 17 ஆவது ஓவரிலேயே இலக்கை எட்டியது. அந்த அணியில் பிரப்சிம்ரான் சிங் சிறப்பாக விளையாடி 69 ரன்கள் சேர்த்தார். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 52 ரன்கள் சேர்த்து வெற்றியை உறுதி செய்தார்.இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணி.
இந்த போட்டியில் லக்னோ அணியில் இடம்பெற்றிருந்த திக்வேஷ் ராதி என்ற பவுலர், பஞ்சாப் அணி பேட்ஸ்மேன் ப்ரியன்ஷி ஆர்யா என்ற வீரரின் விக்கெட்டை வீழ்த்தினார். அப்போது அவர் கொண்டாட்டத்தில் கொஞ்சம் எல்லை மீறினார். கையெழுத்து போட்டு ஆர்யாவை வெளியேறும்படி சைகை செய்தார். இதன் மூலம் அவர் இணையத்தில் விமர்சனங்களை சந்தித்தார். இந்நிலையில் அவரின் இத்தகைய செயலுக்கு போட்டி சம்பளத்தில் 25 சதவீதம் அபராதமாக விதித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம்.