சில தினங்களுக்கு முன்னர் நடந்த இந்தியா பாகிஸ்தான் போட்டி பரபரப்பில்லாமல் ஒருதலைபட்சமாக முடிந்தது. ஆனால் போட்டியில் நடந்த இன்னொரு சம்பவம்தான் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. இந்த போட்டி முடிந்ததும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி வீரர்கள் கைகுலுக்கிக் கொள்ளவில்லை.
இந்திய பேட்ஸ்மேன்கள் போட்டி முடிந்ததும் பாக் வீரர்களோடு கைகுலுக்காமல் நேரடியாக பெவிலியனுக்குத் திரும்பினர். அதே போல டாஸ் போட்டபோதும் இரு அணிக் கேப்டன்களும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை. கிரிக்கெட் போட்டிகள் முடிந்ததும் இரு அணி வீரர்களும் கைகுலுக்கிக் கொள்வது நூறாண்டு காலமாக நீடித்து வரும் வழக்கம்.
அரசியல் காரணங்களை விளையாட்டில் புகுத்துவது கிரிக்கெட்டின் அறத்துக்கு எதிரானது என இந்திய அணிக்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையில் இந்திய அணி ஆசியக் கோப்பையை வென்றால் அதை மோஷின் நக்வி (பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மற்றும் ஆசியக் கிரிக்கெட் வாரியத் தலைவர்) கைகளில் இருந்து இந்திய கேப்டன் சூர்யகுமார் வாங்க மாட்டார் என தகவல் பரவி வருகிறது.