இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடிவருகிறது. நேற்று புனேவில் நடந்த நான்காவது போட்டியை வென்றதன் மூலம் தொடரை இந்திய அணிக் கைப்பற்றியுள்ளது.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 181 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தாலும் ரிங்கு சிங், ஷிவம் துபே மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு இந்திய அனியின் ரன்னை உயர்த்தினர். ஷிவம் துபே 54 ரன்களும் ஹர்திக் பாண்ட்யா 53 ரன்களும் சேர்த்தனர். இதன் பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 166 ரன்கள் மட்டுமே சேர்த்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
இந்த வெற்றிக்குப் பின்னர் பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் “ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். ஒரே ஓவரில் மூன்று விக்கெட்களை இழந்ததுதான் தவறாகிவிட்டது. ஆனால் ஷிவம் துபே மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகிய இருவரும் தங்கள் அனுபவத்தை சரியாக வெளிப்படுத்தினார்கள். இதைதான் நாங்கள் அணிக்குள் பேசிவருகிறோம். எல்லா வீரர்களும் அவர்களின் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என. பவுலிங்கைப் பொறுத்தவரை பவர் ப்ளேக்கு பிறகு ஆட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவரமுடியும் என நினைத்தோம். அப்படியே பவுலர்கள் செயல்பட்டார்கள்” எனக் கூறியுள்ளார்.