இந்திய அணி தற்போது மூன்று வடிவிலான போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மூன்று கேப்டன்கள் இந்திய அணியைக் கடந்த சில மாதங்களாக வழிநடத்தி வருகின்றனர். டெஸ்ட் போட்டிகளில் ஷுப்மன் கில்லும், டி 20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவும் ஒரு நாள் போட்டிகளில் ரோஹித் ஷர்மாவும் வழிநடத்துகின்றனர்.
2027 ஆம் ஆண்டு ஐம்பது ஓவர் உலகக் கோப்பைத் தொடர் வரவுள்ள நிலையில் புதிய இளம் இந்திய அணியைக் கட்டமைக்க பிசிசிஐ முயல்வதாக தெரிகிறது. அதனால் மூத்த வீரர்களான ரோஹித் மற்றும் கோலி ஆகியோரை ஓரம்கட்ட நினைப்பதாக சொல்லப்படுகிறது.
தற்போது 38 வயதாகும் ரோஹித் ஷர்மா அடுத்த உலகக் கோப்பையில் விளையாட விரும்பினாலும் அதற்கான சாத்தியங்கள் தெரியவில்லை. இந்நிலையில் ரோஹித் ஷர்மாவுக்கு ஒருநாள் போட்டிகளுக்குப் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரை நியமிக்க ஆலோசித்து வருவதாக தற்போது தகவல் பரவத் தொடங்கியுள்ளது. ஆனால் அப்படி எந்த விவாதமும் நடக்கவில்லை என பிசிசிஐ தரப்பு உறுதி செய்தது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா A அணிக்கு எதிரான இரண்டு நாட்கள் நடக்கும் Multi day போட்டிகளுக்கான இந்திய A அணிக்கு ஸ்ரேயாஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து டெஸ்ட் மற்றும் டி 20 போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயர் புறக்கணிக்கபட்டு வந்த நிலையில் இந்த வாய்ப்பு அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.