இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிக்கு மிக நெருக்கத்தில் வந்த நிலையில் 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது இந்திய ரசிகர்களுக்குப் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜடேஜா வெற்றிக்காக தனியாளாகப் போராடினார்.
அவருக்கு உதவியாக கீழ்வரிசை பேட்ஸ்மேன்களான பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோரும் போராடினர். ஆனால் இந்த போட்டியை இந்திய அணியால் வெற்றி பெறமுடியவில்லை. பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் மட்டும் இணைந்து 90 பந்துகளுக்கு மேல் தாக்குப்பிடித்தனர். இந்த போட்டியில் கடைசி விக்கெட்டாக சிராஜ் பவுல்ட் ஆகி ஆட்டமிழந்தார்.
இந்த போட்டியில் ஜடேஜாவின் இன்னிங்ஸ் பாராட்டப்பட்டு வரும் நிலையில் சஞ்சய் மஞ்சரேக்கர் ஜடேஜா மேல் விமர்சனம் வைத்துள்ளார். அதில் “ஜடேஜா லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடினார். ஆனால் அவர் அணி வெற்றி பெறுவதற்காக ரிஸ்க் எடுத்து ஷாட்களை ஆடவில்லை. அவர் நிதானமாக விளையாடி ஜெயிக்கலாம் என நினைத்தார்.” எனக் கூறியுள்ளார். சஞ்சய் மஞ்சரேக்கர் தொடர்ந்து ஜடேஜாவை இதுபோல விமர்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.