இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிக்கு மிக நெருக்கத்தில் வந்த நிலையில் 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது இந்திய ரசிகர்களுக்குப் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜடேஜா வெற்றிக்காக தனியாளாகப் போராடினார்.
அவருக்கு உதவியாக கீழ்வரிசை பேட்ஸ்மேன்களான பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோரும் போராடினர். ஆனால் இந்த போட்டியை இந்திய அணியால் வெற்றி பெறமுடியவில்லை. பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் மட்டும் இணைந்து 90 பந்துகளுக்கு மேல் தாக்குப்பிடித்தனர். இந்த போட்டியில் கடைசி விக்கெட்டாக சிராஜ் பவுல்ட் ஆகி ஆட்டமிழந்தார்.
வெற்றியின் அருகே இருந்த மேட்ச் கையை விட்டு போனதை அடுத்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் சிராஜ் நீண்ட நேரம் சோகத்துடன் அமர்ந்திருந்தார். அவரை இங்கிலாந்து மற்றும் இந்திய வீரர்கள் தேற்றினர். இந்நிலையில் இப்போது லார்ட்ஸ் தோல்வி குறித்து சிராஜ் பதிவிட்டுள்ளார்.
அதில் “சில போட்டிகள் எப்போதும் நம் கூடவே இருக்கும். அவற்றின் முடிவுகளுக்காக அல்ல. அவை நமக்குக் கற்றுக் கொடுத்தவைகளுக்காக” என தெரிவித்துள்ளார்.