Publish Date: Thu, 10 Apr 2025 (08:13 IST)
Updated Date: Thu, 10 Apr 2025 (08:24 IST)
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட்களை இழந்து 217 ரன்கள் சேர்த்தது. குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடி 53 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அடுத்தடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்ததால் அந்த அணியால் இலக்கைத் துரத்த முடியவில்லை. 159 ரன்கள் மட்டுமே சேர்த்து அந்த அணி ஆட்டமிழந்தது. அந்த அணியின் இளம் வீரர் ரியான் பராக் அதிரடியாக ஆடிவந்த நிலையில் அவரின் சர்ச்சைக்குரிய விக்கெட் அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது.
ரியான் பராக் ஏழாவது ஓவரில் பேட் செய்யும் போது விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் என அறிவிக்கப்பட்டார். ஆனால் அவர் உடனடியாக அந்த விக்கெட்டை ரிவ்யூ செய்தார். அதையடுத்து மூன்றாம் நடுவர் அந்த விக்கெட்டை ரிவ்யூ செய்தார். அப்போது பந்து பேட்டைத் தாண்டி செல்லும் போது பேட் தரையில் பட்டது. இதனால் ஸ்னிக்கோ மீட்டரில் அந்த நேரத்தில் மாற்றம் தெரிந்தது. இதன் காரணமாக பந்து பேட்டில் பட்டதா, அல்லது பேட் தரையில் பட்டதா என்பதை உறுதி செய்யமுடியவில்லை. ஆனாலும் மூன்றாம் நடுவர் அதை அவுட் என அறிவித்தார். இதன் காரணமாக அதிருப்தி அடைந்த பராக், கள நடுவரிடம் வாக்குவாதம் செய்தார். பின்னர் தன்னுடைய அதிருப்தியை வெளிக்காட்டி வெளியேறினார்.
vinoth
Publish Date: Thu, 10 Apr 2025 (08:13 IST)
Updated Date: Thu, 10 Apr 2025 (08:24 IST)