நேற்று ஜெய்ப்பூரில் நடந்த ஒன்பதாவது ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் மோதின. போட்டியில் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அந்த அணியின் ரியான் பராக் மட்டும் நிலைத்து நின்று விளையாடி அரைசதம் அடித்தார். அவர் 45 பந்துகளில் 84 ரன்கள் சேர்த்தார். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 185 ரன்கள் சேர்த்தது.
இந்த இலக்கைத் துரத்திய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 173 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வென்றது. அந்த அணிக்கு சிறந்த தொடக்கம் அமைந்தும் இறுதிகட்டத்தில் ராஜஸ்தான் பவுலர்கள் சிறப்பாக பந்துவீசியதால் டெல்லி அணியால் வெற்றியைப் பெற முடியவில்லை.
தோல்விக்குப் பின்னர் பேசிய டெல்லி அணிக் கேப்டன் ரிஷப் பண்ட் “இந்த போட்டியில் இருந்து எதாவது ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டுமென்றால் தவறுகளில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான். எங்கள் பவுலர்கள் 15 ஓவர்கள் வரை சிறப்பாக பந்துவீசினார்கள். ஆனால் அதன் பின்னர் அதிக ரன்களை வழங்கிவிட்டோம். பேட்டிங்கில் எங்களுக்கு வார்னர் மற்றும் மார்ஷ் சிறந்த தொடக்கத்தைக் கொடுத்தார்கள். விக்கெட்களை தக்கவைத்துக் கொண்டு கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடலாம் என நினைத்தோம். ஆனால் கடைசி நேரத்தில் தேவைப்படும் ரன்கள் அதிகமாகிவிட்டதால் அதை எங்களால் எட்ட முடியவில்லை.” எனக் கூறியுள்ளார்.