நேற்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியிடம் தோல்வியடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி சிக்ஸர் மழை பொழிந்து 277 ரன்களை குவித்தது. இதுவரையிலான ஐபிஎல் சீசன்களிலேயே அதிகபட்ச ஸ்கோராக இது சாதனை படைத்துள்ளது.
அதை தொடர்ந்து சேஸிங்கில் இறங்கிய மும்பை அணி முடிந்த அளவு போராடி 246 ரன்களை மட்டுமே சேர்த்து தோல்வியடைந்தது. இந்த போட்டியில் முதலில் ஹைதராபாத் அதிக ரன்கள் ஸ்கோர் செய்தது முதல் மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்கில் வீக் ஆனது வரை பல வகை சிக்கல்களுக்கு ஹர்திக் பாண்ட்யாவின் அனுபவமில்லாத கேப்பிட்டன்சியே காரணம் என ரசிகர்கள் பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி ஆரம்பமே அதிரடியாக ஆடத் தொடங்கி விட்ட நிலையில் பவர் ப்ளேவுக்கு பிறகான ஓவர்களில் அவர்களை கட்டுப்படுத்த ஜாஸ்பிரித் பும்ராவை இறக்காமல், டெத் ஓவர்களுக்காக அவரை இறக்காமல் வைத்திருந்ததால் ரன்ரேட் எகிறியது. அதேபோல் மும்பை சேஸிங் இறங்கியபோது ஓவருக்கு 20க்கு குறையாமல் ரன் எடுக்க வேண்டிய அவசியம் இருந்தது. அப்போது களமிறங்கிய திலக் வர்மா, டிம் டேவிட், கடைசியாக இம்பேக்ட் ப்ளேயராக வந்த ரொமரியோ ஷெப்பர்ட் கூட குறைந்த பந்துகளில் சிக்ஸர், பவுண்டரி என அடித்து முடிந்த அளவு ரன்களை ஏற்றிக் கொண்டிருந்தனர்.
ரொமெரியோ ஷெப்பர்ட் இம்பேக்ட் ப்ளேயராக சிறப்பாக செயல்பட்டார். ஆனால் அவரை திலக் வர்மா விக்கெட்டுக்கு பிறகு 14வது ஓவரிலேயே இறக்கி இருந்தால் இலக்கை நெருங்க உதவியாக இருந்திருக்கும். ஆனால் திலக் வர்மா விக்கெட்டுக்கு பிறகு ரன் அடித்து குவிப்பது போல ஹர்திக் பாண்ட்யாவே களம் இறங்கி 1 பவுண்டரி, 1 சிக்ஸ் மட்டும் அடித்து விட்டு 20 பந்துகளுக்கு 24 ரன்கள் என்ற மோசமான ஆட்டத்தை அளித்தார். அவர் அந்த நேரம் இறங்கியிருக்கவே கூடாது என்பது பலரது கருத்தாக உள்ளது.
இதையெல்லாம் தாண்டி போட்டி நடந்த ஐதராபாத் மைதானம் பேட்டிங் பிட்ச். அதனால் ஐதராபாத், மும்பை இரு அணி வீரர்களுமே நன்றாக அடித்து விளையாட முடிந்தது. என்னதான் ஐதராபாத் 277 என்ற ரெக்கார்ட் ப்ரேக்கிங் ரன்னை குவித்தாலும் அவர்களிடமும் பவுலிங் ஆர்டர் சுமாராகவே இருந்தது. நடராஜன் இல்லாதது ஒரு குறை. இதனால் அவர்களுமே மும்பைக்கு ரன்களை அள்ளி கொடுக்கவே செய்தனர். இதனால் இரு அணிகளுமே கிட்டத்தட்ட 250+ ரன்களை நெருங்கும் வாய்ப்புகள் இருந்தது. மும்பை அணி ஹர்திக் பாண்ட்யா ஓவரில் சுணக்கம் கண்டது நடக்காமல் இருந்திருந்தால் மும்பை வென்றிருக்க வாய்ப்புகள் இருந்தது. ஆனால் ஹர்திக் பாண்ட்யா மட்டுமே தோல்விக்கு காரணமல்ல, அவர் கேப்பிட்டன்சியில் மேலும் பக்குவப்பட வேண்டும் என்ற கருத்துகளும் உள்ளது.