ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வந்த நிதிஷ்குமார் ரெட்டி தனது ஆபாரமான ஆட்டத்தால் இந்திய அணியின் டி20 போட்டிகளில் பங்கேற்றார். அதிலும் அவர் சிறப்பாக செயல்பட்ட நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கிய பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணியின் இளம் வீரர் நிதீஷ்குமார் அறிமுகப்படுத்தப்பட்டார்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அந்த தொடரில் ஒரு சதமும் அடித்து அசத்தினார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் தனக்கான இடத்தை அவர் உறுதி செய்துள்ளார். இந்நிலையில் தான் சதம் அடித்த இன்னிங்ஸ் குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார்.
அதில் “அந்த தொடரில் விராட் கோலி சர்பராஸிடம் உன் ஷூ அளவு என்ன? எனக் கேட்டார். அவர் 9 என்றார். பின்னர் திரும்பி என்னைப் பார்த்து உன் அளவு என்ன?” என்றார். அவருக்கும் எனக்கும் ஒரே அளவு இல்லை என்றாலும் நான் அவரிடம் 10 என்றேன். உடனே அவர் தன்னுடைய ஷூவை என்னிடம் கொடுத்தார். அந்த ஷூவை அணிந்துகொண்டு நான் சதமடித்தேன்” எனக் கூறியுள்ளார்.