துபாயில் நேற்று நடந்த இந்தியா பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. ஆனால், அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் வரிசையாக சொதப்பினர். இறுதியில், 49.4 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 241 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதன் பின்னர் ஆடிய இந்திய அணி 43 ஆவது ஓவரில் வெற்றிக்கான இலக்கை எட்டியது. இந்த போட்டியில் மிகச்சிறப்பாக சதமடித்து இந்திய அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார் விராட் கோலி. தனது சதத்துக்காக ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
கோலி ஐசிசி தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பெறும் ஐந்தாவது ஆட்டநாயகன் விருது இதுவாகும். எந்தவொரு வீரரும் ஒரு அணிக்கெதிராக இத்தனை முறை ஐசிசி தொடரில் ஆட்டநாயகன் விருதை வென்றதில்லை. கடந்த சில மாதங்களாக ஃபார்ம் அவுட்டில் இருந்த கோலி, பாகிஸ்தான் போட்டியின் மூலம் தன்னுடைய ரன் மெஷின் mode-ஐ திரும்பப் பெற்றுள்ளார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.