இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் கடந்த ஆண்டு டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் இந்த ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் ஓய்வை அறிவித்தனர்.
தற்போது அவர்கள் ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகின்றனர். இருவரும் 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் விளையாடிவிட்டு ஓய்வை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விராட் கோலிக்கு 36 வயதும், ரோஹித் ஷர்மாவுக்கு 37 வயதும் ஆகிறது. ஆனால் அதற்கான சாத்தியக் கூறுகள் என்ன என்பது குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் அவர்கள் இருவரும் விளையாடுவது நிச்சயமில்லை என்ற தகவல் பரவி வருகிறது. கிரிக்கெட்டில் அவர்களின் எதிர்காலம் குறித்து முடிவு செய்ய இருவரையும் பேச்சுவார்த்தைக்கு பிசிசிஐ தரப்பு அழைப்பு விடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் கோலி மற்றும் ரோஹித்தை ஒருநாள் போட்டிகளிலும் ஓய்வறிவிக்க வைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.