நேற்றைய ஐபிஎல் போட்டியில் தோற்றதற்காக கே.எல்.ராகுலை அணி உரிமையாளர் திட்டும் வீடியோ வைரலான நிலையில் ஆர்சிபி ரசிகர்களும், கே.எல்.ராகுல் ரசிகர்களும் லக்னோ அணி நிர்வாகத்திற்கு எதிராக கொதித்து எழுந்துள்ளனர்.
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதிக் கொண்டன. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 165 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சேஸிங்கில் இறங்கிய சன்ரைசர்ஸ் அணி விக்கெட்டே இழக்காமல் 167 ரன்களை வெறும் 9.4 ஓவர்களிலேயே குவித்து லக்னோ ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினர்.
இந்த தோல்வியினால் கோபமடைந்த லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அணி கேப்டன் கே.எல்.ராகுலிடம் ஆவேசமாக பேசியது நேரடி ஒளிபரப்பிலேயே காட்டப்பட்டது. இதை கண்டு கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும் ஒரு அணி வெல்வதும், தோற்பதும் சகஜம்தான் ஆனால் அதற்காக ஒரு கேப்டனை இப்படி அவமானப்படுத்துவது ஏற்க முடியாதது என பலரும் கோபம் கொண்டுள்ளனர்.
இதுகுறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வரும் ஆர்சிபி ரசிகர்கள் பலரும், எங்கள் அணியும் பல சீசன்களாக தோல்வியை சந்தித்து வருகிறது. ஆனால் இதுபோல கேப்டன்களை நிர்வாகம் அவமானம் செய்தது இல்லை. கே.எல்.ராகுல் தன்னை அவமானம் செய்த அணியில் இருப்பதை விட ஆர்சிபிக்கு வந்துவிடலாம் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதுபோக தற்போது இந்த விவகாரத்தால் கே.எல்.ராகுலுக்கும், லக்னோ அணி நிர்வாகத்திற்குமே பெரிய மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் அடுத்து வரும் போட்டிகளில் கே.எல்.ராகுல் கேப்டனாக இருக்க மாட்டார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது.