கடந்த 2004 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த மிக மோசமான ரயில் விபத்துக்குப் பிறகு உலகளவில் பெரிய ரயில் விபத்தாக நடந்துள்ளது ஒடிசா பால்சோர் ரயில் விபத்து. ஒடிசா மாநிலம் பால்சோர் பகுதியில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 288 ஆக உள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1000 ஐ தாண்டியுள்ளது. மீட்புப் பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் பலி எண்ணிக்கை இன்னும் அதிகமாகலாம் என்ற துயரமான தகவல் நெஞ்சை பிசைவதாக உள்ளது.
இந்நிலையில் இந்த சம்மந்தப்பட்ட ரயில்களில் ரயில் விபத்துகளை தடுக்கும் KAVACH என்ற தொழில்நுட்பம் பயன்படுத்த படவில்லையா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. KAVACH தொழில்நுட்பம் என்பது ஒரே தண்டவாளத்தில் எதிரெதிர் திசையில் ரயில்கள் வந்தால் அதை எச்சரித்து விபத்தைத் தடுக்கும் தொழில்நுட்பம் என சொல்லப்படுகிறது. மோசமான வானிலை நாட்களில் இந்த தொழில்நுட்பம் உதவுகிறது.
இந்தியாவில் பெரும்பாலான ரயில்களில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப் படுவதாக தெரிகிறது. ஆனால் கோரமண்டல் ரயிலில் அந்த தொழில்நுட்பம் இருந்ததா எனத் தெரியவில்லை. ஒருவேளை இருந்திருந்தால் இந்த விபத்தைத் தடுத்திருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்போது முதல் கட்ட விசாரணைகள் நடந்து வரும் நிலையில் விரைவில் உண்மைக் காரணம் என்னவென்று தெரியவரும் என நம்பப்படுகிறது.