இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள நிலையில் இந்த ஆண்டு முதல் விதிகளில் புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஐபிஎல் 2023 சீசன் மார்ச் இறுதியில் தொடங்கி நடைபெற உள்ளது. 10 அணிகள் மோதிக் கொள்ளும் இந்த விளையாட்டில் இந்திய வீரர்கள் மட்டுமல்லாமல் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து உள்ளிட்ட பல நாட்டு கிரிக்கெட் வீரர்களும் பல அணிகளில் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கான விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஆடும் 11 வீரர்களை கிரிக்கெட் அணிகள் அறிவித்த பின் டாஸ் போடப்படும். டாஸ் வென்ற பின் ஆடும் 11 அணி வீரர்களை மாற்ற முடியாது. இந்த சீசன் முதல் இந்த விதி மாற்றப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி டாஸ் வென்றபின் ஆடும் 11 வீரர்களை அறிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இதனால் டாஸில் பேட்டிங் அல்லது பவுலிங் கிடைப்பதை பொறுத்து வீரர்களை மாற்றிக் கொள்ள முடியும். அதுபோல அணியில் இம்பேக்ட் ப்ளேயராக இந்திய வீரர் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். அந்த அணியில் 4க்கும் குறைவான வெளிநாட்டு வீரர்கள் இருந்தால் மட்டுமே வெளிநாட்டு வீரரை இம்பேக்ட் ப்ளேயராக பயன்படுத்த முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.