மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையில் இன்று நடந்து வரும் போட்டி ஐபிஎல் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்துள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய ஐதராபாத் அணி ஆரம்பம் முதலே அதிரடியில் புகுந்து மும்பை இந்தியன்ஸ் பவுலர்களை நடுங்க வைத்தனர்.
அந்த அணியின் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா மற்றும் ஹென்ரிச் கிளாசன் ஆகியோரின் அதிரடியால் 3 விக்கெட்களை இழந்து 277 ரன்கள் சேர்த்தது. இந்த ஸ்கோர் ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணி அடித்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும். மும்பை போன்ற வலுவான பவுலர்களைக் கொண்ட ஒரு அணிக்கு எதிராக சன் ரைசர்ஸ் இந்த சாதனையைப் படைத்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சர்யத்தில் வாய் பிளக்க வைத்துள்ளது.
இதற்கு முன்பு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புனே வாரியரஸ் அணிக்கு எதிராக 263 ரன்கள் சேர்த்திருந்ததே இதுவரையிலான சாதனையாக இருந்தது. 11 வருட அந்த சாதனையை தற்போது சன் ரைசர்ஸ் அணி முறியடித்துள்ளது.