சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் நேற்று துபாயில் நடந்த இந்தியா பாகிஸ்தான் போட்டியில் இந்திய அணி மிக எளிதான வெற்றியைப் பெற்றது. இந்த பாகிஸ்தான் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. ஆனால், அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் வரிசையாக சொதப்பினர். இறுதியில், 49.4 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 241 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதன் பின்னர் ஆடிய இந்திய அணி 43 ஆவது ஓவரில் வெற்றிக்கான இலக்கை எட்டியது. இந்த போட்டியில் மிகச்சிறப்பாக சதமடித்து இந்திய அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார் விராட் கோலி. தனது சதத்துக்காக ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
இந்நிலையில் இந்த போட்டியில் கோலி சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த போது ஸ்ரேயாஸ் ஐயர் அவுட் ஆனார். அப்போது களத்துக்குள் வந்த ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக விளையாடத்தொடங்க்கி ஒரு பவுண்டரியை விளாசினார். அப்போது வெற்றிக்குத் தேவைப்படும் ரன்களும் கோலியின் சதத்துக்குத் தேவைப்படும் ரன்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லாமல் இருந்தது. அதனால் பாண்ட்யா பவுண்டரி அடித்தபோது ரசிகர்கள் அதை விரும்பவில்லை.
கோலிக்கு சிங்கிள் கொடுத்து அவரை சதமடிக்க வைக்க வேண்டும் என்றே பலரும் விரும்பினர். நல்ல வேளையாக அடுத்த சில பந்துகளில் பாண்ட்யா அவுட் ஆனார். அதன் பின்னர் அக்ஸர் வந்து சிங்கிள்கள் எடுத்துக் கொடுத்தார். இந்நிலையில் கோலி சதமடிக்கக் கூடாது என்பதற்காகவே வரிசையை மாற்றி பாண்ட்யாவை கம்பீர் அனுப்பியதாக சமூகவலைதளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.