இந்திய அணி கண்ட மிகச்சிறந்த கேப்டன்களில் சவுரவ் கங்குலி முதன்மையானவர். சூதாட்ட சர்ச்சையில் சிக்கி சின்னாபின்னமாக ஆக இருந்த இந்திய அணியை கடைதேற்றியவர் கங்குலி என்று சொன்னால் அது மிகையாகாது. 2003 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் இறுதி போட்டி வரை இந்திய அணியை அழைத்துச் சென்றவர்.
ஆனால் அதன் பிறகு அவரின் கிரிக்கெட் வாழ்க்கை மங்குதிசை நோக்கி சென்றது. பின்னர் 2008 ஆம் ஆண்டு அவர் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் அவர் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்தார்.
தற்போது அவர் ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் இயக்குனராக இருக்கிறார். இந்நிலையில் இன்று கொல்கத்தாவில் அவர் சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளது. நல்வாய்ப்பாக அதில் பயணம் செய்த கங்குலி உள்ளிட்ட யாருக்கும் எதுவும் ஆகவில்லை. முன்னால் சென்ற லாரி மீது மோதிவிடாமல் இருக்க கங்குலி சென்ற காரின் ஓட்டுனர் பிரேக் அடித்து நிறுத்திய போது பின்னால் வந்த கார் அவர் கார் மேல் மோதியுள்ளது.