இந்திய அணி இம்மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வை அறிவித்து விட்டதால் இன்று அறிவிக்கப்பட்டுள்ள அணியில் இளம் வீரர்கள் சிலருக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.
இளம் இந்திய அணிக்குக் கேப்டனாக ஷுப்மன் கில்லும், துணைக் கேப்டனாக ரிஷப் பண்ட்டும் அறிவிக்கப்பட்டுள்ளனர். 25 வயதாகும் ஷுப்மன் கில் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா போன்ற அனுபவம் மிக்க வீரர்களுக்குப் பிறகு இந்திய அணியை வழிநடத்த உள்ளார். இங்கிலாந்து தொடருக்கான அணி இன்று இங்கிலாந்துக்கு சென்றுள்ளது.
இந்த தொடரில் இந்திய அணியின் நட்சத்திர பவுலர் இடம்பெற்றாலும் அவரால் ஐந்து போட்டிகளிலும் விளையாட முடியாத சூழல் உள்ளது. அவரது காயமே அதற்குக் காரணம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் இது பற்றி பேசும்போது “5 போட்டிகள் கொண்ட தொடரில் எந்த மூன்று போட்டிகளில் பும்ரா விளையாடுவார் என்பது அவரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். தொடரின் போக்கைப் பொறுத்தே அந்த முடிவை எடுப்போம்” எனக் கூறியுள்ளார்.