Publish Date: Sat, 13 Jul 2024 (07:50 IST)
Updated Date: Sat, 13 Jul 2024 (08:14 IST)
கடந்த ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக மிகச்சிறப்பான பங்களிப்பைக் கொடுத்தவர் முகமது ஷமி. ஆனால் அதன் பின்னர் காயம் காரணமாக அவர் கிரிக்கெட்டில் இருந்து சில மாதங்கள் விலகி சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.
கணுக்கால் காயம் காரணமாக அவதிப்படும் அவருக்கு லண்டனில் ஜனவரி மாதம் ஊசி மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவரது காயத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை என்பதால் அவருக்கு கனுக்காலில் அறுவை சிகிச்சை லண்டனில் நடந்தது. அதையடுத்து இப்போது அவர் காயத்தில் இருந்து மீண்டெழுந்து வருகிறார். இந்நிலையில் அவர் விரைவில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் இந்திய அணிக்குத் திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பவுலிங் பயிற்சியாளரான ஃபராஸ் மாம்ப்ரே ஷமியால் அணிக்கு இனிமேல் எந்த விதத்தில் பாங்காற்ற முடியும் என்பதை புதிய பயிற்சியாளர் குழு அவரிடம் ஆலோசிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். அதில் “ஷமி இன்னும் இளம் வீரர் இல்லை. அவர் அணியில் என்ன செய்ய விரும்புகிறார். எந்த இடத்தில் தன்னை சரியான ஆளாகக் கருதுகிறார் என்பதை புதிதாக வரவிருக்கும் பயிற்சியாளர் கண்டறியவேண்டும். அவர் இனிமேல் டெஸ்ட் போட்டிகளில் மட்டும்தான் விளையாட விரும்புகிறார் என்றால் ஆஸ்திரேலியா தொடருக்கு முழு உடல் தகுதியோடு வரவேண்டும்” எனக் கூறியுள்ளார். ஷமி, இனிமேல் அணிக்குத் தேவையில்லை என்பது போல அவர் பேசியுள்ள ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.