சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் கொல்கத்தா அணி இமாலய வெற்றியைப் பெற்றது. முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணியின் பேட்ஸ்மேன்கள் மோசமாக விளையாடியதை தொடர்ந்து, 103 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்க முடிந்தது.
சிஎஸ்கே வீரர்கள் பலர் ஒற்றை இலக்கத்திலும் ரன்கள் எதுவும் சேர்க்காமலும் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இதன் காரணமாக முதல் பாதி முடிந்ததுமே பாதி ரசிகர்கள் மைதானத்தை விட்டு வெளியேறினர். இந்த இலக்கை கொல்கத்தா அணி பத்தே ஓவர்களில் எட்டி போட்டியை வெகு சீக்கிரமாகவே முடித்தது.
இந்நிலையில் டாஸ் போடும் போது சி எஸ் கே அணிக் கேப்டன் தோனி பேசியது கவனம் பெற்றுள்ளது. அவர் “எங்கள் அணியில் எல்லாப் பந்துகளையும் சிக்ஸர் அடிக்கும் பேட்ஸ்மேன்கள் இல்லை. அவர்கள் பொறுமையாக விளையாடி, நிறைய பவுண்டரிகள் அடிக்கும் திறன் கொண்ட பேட்ஸ்மேன்கள். பவர் ப்ளேயில் அதிக சிக்ஸர் அடிக்கும் அணி நாங்கள் இல்லை. ஆனால் எங்களால் அதிக நான்கு ரன்கள் அடிக்க முடியும். இப்போது நாங்கள் செய்ய வேண்டியதெல்லாம் பவர்ப்ளேயில் குறைவான டாட் பந்துகளை விளையாடுவதுதான்” எனக் கூறியுள்ளார்.