சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் கொல்கத்தா அணி இமாலய வெற்றியைப் பெற்றது. முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணியின் பேட்ஸ்மேன்கள் மோசமாக விளையாடியதை தொடர்ந்து, 103 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்க முடிந்தது.
சிஎஸ்கே வின் இந்த மோசமான பேட்டிங்கால ரசிகர்கள் முதல் பாதி முடிந்த உடனே மைதானத்தை விட்டு வெளியேறினர். இதையடுத்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பத்தே ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி வாகை சூடியது. தற்போது ஐந்து தோல்விகளைப் பெற்றதால் சென்னை அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு மங்கியுள்ளது.
இந்நிலையில் சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி “எங்கள் அணியின் மூத்த வீரர்களிடம் இன்னும் கிரிக்கெட் ஆடும் திறன் உள்ளது. ரஹானே மற்றும் வாட்சன் ஆகியோர் எங்கள் அணிக்கு வந்து சிறப்பாக ஆடியுள்ளனர். ப்ளே ஆஃப்க்கு செல்ல முடியாது என்ற நிலையில்தான் அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிப்பார்கள். ஆனால் நாங்கள் இன்னும் அந்த நிலைக்கு செல்லவில்லை என்று நினைக்கிறேன். இன்னமும் நாங்கள் வெள்ளைக் கொடியைக் காட்டிவிடவில்லை.” எனக் கூறியுள்ளார்.