இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதிய முதல் அரையிறுதிப் போட்டி மூன்று நாட்களுக்கு முன்னர் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 4 விக்கெட் இழந்து 397 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் ஆடிய நியுசிலாந்து அணி 327 ரன்கள் மட்டும் சேர்த்து 70 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த போட்டியில் இந்தியாவின் முகமது ஷமி 7 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரை 6 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ஷமி 23 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதுவரை 16 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ள ஷமி 54 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
இந்நிலையில் அவரை கௌரவிக்கும் வகையில் உத்தர பிரதேச மாநிலம் அவர் பிறந்த அலிநகர் கிராமத்தில் சிறுவர்களுக்கான சிறிய விளையாட்டு மைதானம் ஒன்றை அமைக்க உத்தர பிரதேச அரசு முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான வேலைகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.