நேற்று நடந்த இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளது. நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 212 ரன்கள் சேர்த்தது. அந்த அணி பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே விக்கெட்டை இழந்த நிலையில் நிலைத்து நின்ற டேவிட் மில்லர் சதமடித்து அசத்தினார்.
அதன் பின்னர் ஆடிய ஆஸி அணி 7 விக்கெட்களை இழந்து போராடி இலக்கை எட்டியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் 48 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்து விக்கெட்டுக்கு முக்கியக் காரணியாக அமைந்தார். கடைசி கட்டத்தில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் நிதானமாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த போட்டியில் 18 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்தார் ஆஸி அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர். இதன் மூலம் இந்த உலகக் கோப்பை தொடரில் 500 ரன்களை கடந்தார். ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் 647 ரன்கள் சேர்த்திருந்தார். இதன் மூலம் சச்சின் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோருக்கு பிறகு இரண்டு உலகக் கோப்பை தொடர்களில் 500 ரன்களுக்கு மேல் சேர்த்த மூன்றாவது வீரர் என்ற சாதனையை வார்னர் படைத்துள்ளார்.