ராஜாக்கமங்கலத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் அமுதன்-மோனிஷா திருமணத்தை தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நடத்தி வைத்தார்.
இதைத்தொடர்ந்து பிரேமலதா நிருபர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறியதாவது:- கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் அமுதன் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக வந்துள்ளேன். நேற்று கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை விவேகானந்தர் மண்டபம், கோவில்களுக்கு சென்று விட்டு திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளேன்.
சென்னை மெட்ரோ சிட்டியாகும் ஒரு இடத்தில் ரோடு போட்டால் மற்ற இடத்தில் பள்ளம் தோண்டி வருகிறார்கள். அதை மூடுவதற்கு உடனடி நடவடிக்கை எடுப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. மழை நீர் வடிகால் வேலை ஆரம்பித்து கடந்த 2½ ஆண்டுகள் ஆகிறது. பள்ளம் தோன்றுவதில் வேகத்தை காண்பிக்கும் அரசாங்கம் அதை மூடுவதில் காட்டுவதில்லை. இதனால் இருச்சக்கர வாகனங்கள், ஆட்டோ வாகனங்களில் பயணிப்பவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.
எனவே தமிழக அரசு சிங்கார சென்னை சிங்கப்பூருக்கு இணையான சென்னை என்று கூறி அரசு அதற்கான வழியோ முயற்சிகளோ எடுக்கவில்லை. உடனடியாக மழைநீர் வடிகால் சரி செய்யும் திட்டத்தை சரி செய்து மக்களை பாதுகாப்பாக பயணம் செய்ய சாலை அமைக்க வேண்டும். தேர்தலில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பதை தீர்மானம் செய்பவர்கள் மக்கள்தான்.
யார் எஜமானர்கள் என்பதை மக்கள் தீர்ப்பை மகேசன் தீர்ப்பாகும். தே.மு.தி.க. தற்பொழுது யாருடனும் கூட்டணியில் இல்லை. நட்பு ரீதியாக அனைவரும் எங்களுடன் பேசி வருகிறார்கள். ஆனால் யாருடன் கூட்டணி என்ற இறுதி அறிவிப்பு எந்த தொகுதியில் யார் வேட்பாளர் என்பதை தலைவர் தான் ஜனவரி மாதத்தில் அறிவிப்பார்.
அதுவே அதிகாரப்பூர்வமான அறிவிப்பு, அதுவே இறுதியான அறிவிப்பாகும். எந்த கட்சியும் கூட்டணி குறித்து இதுவரை பேசவில்லை. தி.மு.க. ஒரு கூட்டணி அமைத்து பயணித்து வருகிறார்கள் . மற்ற கட்சிகள் கூட்டணி குறித்து இதுவரை தொடங்கப்படவில்லை. இந்தியா கூட்டணி கடைசி வரைக்கும் உறுதியான கூட்டணியா என்பதை கேள்விக்குறியாக உள்ளது. அதில் இருக்கின்ற அத்தனை மாநில முதல்-அமைச்சர்களும் அடுத்த பிரதமரும் நான்தான் என்கிறார்கள்.
ஒருவர் தான் பிரதமராக வர முடியும். அவர்கள் கூட்டணியில் முரண்பாடு உள்ளது. அந்த கூட்டணி இறுதிவரை செல்லுமா பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியில் மோடி உள்ளார். எந்த கூட்டணி சரியான கூட்டணி. இறுதி கூட்டணியார் வெல்லப்போகிறார் என்பதை ஜனவரி மாதத்தில் தே.மு.தி.க. முடிவு செய்யும் . யாரும் நீட் தேர்வை பற்றி பேசவில்லை.
உதயநிதி மட்டும் தான் அதை பற்றி பேசி வருகிறார். 50 லட்சம் கையெழுத்து என்று கூறி வருகிறார். எல்லாமே கண்துடைப்பாக தான் நான் பார்க்கிறேன். மாணவர்களை குழப்பாமல் இருந்தாலே போதும். மாணவர்கள் படித்து தேர்வு எழுத தயாராகி விடுவார்கள். நீட் தேர்வு வராது வராது என்று கூறிவிட்டு மாணவர்களை குழப்பி விட்டு அவர்களை படிக்கவும் விடாமல் ஒரு தெளிவான முடிவை எடுக்க விடாமல் உதயநிதி பேசி வருகிறார்.
நீட் தேர்வு ஒழிக்க முடியாமா என்பது கேள்விக்குறிதான். மாணவர்கள், பெற்றோர்கள் தெளிவாகி விட்டனர். நீட் தேர்வை ஒழிப்பது கடினமாகும். மாணவர்கள் பள்ளிக்கூடங்கள் முடித்து வீட்டிற்கு வந்தவுடன் டியூசனுக்கு செல்கிறார்கள்.
பள்ளிகளில் சரியான கல்வியை கொடுத்தால் இதுபோன்ற கோச்சிங் சென்டர், டியூஷன் சென்டர் செல்ல தேவை இல்லை. அரசு இதில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர உறுதியாக அறிவிக்கப்பட்ட தேர்வு வராது என்று கூறுவதற்கு பதிலாக தேர்வுக்கு தயாராகும் மாணவர்களை பள்ளியிலேயே கோச்சிங் கொடுத்து தேர்வில் வெற்றி பெற பழக்கப்படுத்த வேண்டும். தி.மு.க. மாநாடு நடத்துவது புதிதல்ல. எப்பொழுதும் ஆட்சிக்கு வந்தால் மாநாடு நடத்தி கொண்டு தான் வருகிறார்கள். கலைஞர் உரிமை தொகை திட்டம் வழங்குவது வெற்றி பெறவில்லை.
தே.மு.தி.க. ஆட்சிக்கு வந்தால் வறுமை இல்லாத நேர்மையான ஆட்சியை வழங்குவோம். படித்த, படிக்காத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு நிச்சயமாக வழங்கப்படும். மருத்துவமும், கல்வியும் இலவசமாக வழங்கப்படும். மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவது இதெல்லாம் கண்துடைப்பாகும். இதனால் மக்களுக்கு பயன் இல்லை. இதனால் யாரும் ஆதாயம் அடையப்போவதில்லை. தொலைநோக்கு பார்வையோடு சரியான திட்டங்களை மக்களுக்கு செய்ய வேண்டும். அதுதான் மக்கள் வரவேற்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Edied By: Sugapriya Prakash