Publish Date: Wed, 25 Dec 2024 (13:10 IST)
Updated Date: Wed, 25 Dec 2024 (13:36 IST)
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பார்டர் கவாஸ்கர் தொடருக்கு நடுவே தோனி போலவே ஓய்வை அறிவித்து பரபரப்பை உருவாக்கினார் அஸ்வின். டெஸ்ட் தரவரிசையில் பவுலராகவும் ஆல்ரவுண்டராகவும் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கும் அஸ்வினை வெளிநாட்டு தொடர்களின் போது அணி நிர்வாகம் ஒரு அறிமுக பவுலரைப் போல பென்ச்சில் உட்கார வைக்கின்றனர். அடுத்த இரண்டு போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு இருக்காது என அணி நிர்வாகம் தெரிவித்த பின்னர்தான் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அவர் ஓய்வு குறித்து பேசியுள்ள முன்னாள் வீரர்கள் பலரும் அவர் ஒழுங்காக வழியனுப்பப் படவில்லை என்ற குற்றச்சாட்டையே வைத்துள்ளனர். கபில் தேவ் பேசும் போது “சச்சின் மற்றும் கவாஸ்கருக்கு நிகரான டெஸ்ட் வீரர் அஸ்வின்” எனப் பேசியுள்ளார். கவாஸ்கரும் அதுபோல அஸ்வினுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.
இந்நிலையில் அஸ்வின் தான் இந்திய அணிக்குக் கேப்டனாக தேர்வாகவில்லை என்பது குறித்து வருத்தம் இல்லை எனக் கூறியுள்ளார். அதில் “நான் கேப்டன் ஆவது என் கையில் இல்லை. நான் அணியை வழிநடத்துவேன் என யாரோ ஒரு ஆள் நம்பவேண்டும். சக வீரர்கள் நம்பவேண்டும். நிர்வாகம் என்னைக் கேப்டனாக நியமிக்கவில்லை என்றால் நான் கேப்டனாக தகுதியானவன் இல்லை என்று அர்த்தம் இல்லை” எனக் கூறியுள்ளார்.