அமீர்கான் நடித்த சீக்ரெட் சூப்பர் ஸ்டார் திரைப்படம், தற்பொழுது சீனாவில் வெளியாகி வசூல் சாதனை செய்து வருகிறது.
கடந்த அக்டோபர் மாதம் அமீர்கான் நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியான சீக்ரெட் சூப்பர் ஸ்டார் திரைப்படம், கடந்த வெள்ளிக் கிழமை சீனாவில் வெளியாகி தற்பொழுது வரை 174.10 கோடி வசூல் செய்துள்ளது.
இதன்மூலம் உலகிலேயே அதிக திரையரங்குகள்(41,000) கொண்ட சீனாவில், அமீர்கானின் இத்திரைப்படம் தான் வசூலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இப்படம் வெளியான முதல் நாளில் 43.35 கோடி வசூலானது. அடுத்த இரு தினங்களில் 62.91 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
கடந்த வருடம் அமீர்கான் நடிப்பில் வெளியான டங்கல் திரைப்படம் சீனாவில் வெளியாகி 1234 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. அப்படத்தின் முதல் வார வசூல் 187 கோடியாகும்.
சீனாவில் வெளியான அமீர்கானின் பிகே திரைப்படம் 16 நாட்களில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. அப்படத்தை விட 10 மடங்கு வசூலை செய்து சாதனை படைத்தது டங்கல் திரைப்படம். இந்நிலையில் டங்கல் சாதனையை சீக்ரெட் சூப்பர் ஸ்டார் திரைப்படம் முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.