சிக்கிம் எல்லைப்பகுதியில் இந்தியா, சீனா, பூடான் நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் முச்சந்திப்பு உள்ளது. இது டோக்லாம் பகுதி என அழைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு டோக்லாம் பகுதி விவகாரத்தில் இந்தியா சீனாவிற்கு மத்தியில் பிரச்சனை ஏற்பட்டது.
சுமார் 73 நாட்கள் நீடித்த இந்த மோதல் போக்கால் இரு நாட்டு ராணுவங்களும் டோக்லாம் பகுதியில் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த மோதல் நிறைவுக்கு வந்த பின்னரும் தற்போது அடுத்த சர்ச்சை வெடித்துள்ளது.
டோக்லாம் பகுதியின் செயற்கைகோள் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்தியாவின் ராணுவ முகாம் அருகேயே சீனா ராணுவ தளம் ஒன்றை முழுவதுமாக இப்போது கட்டி முடித்துவிட்டது என்பதை செயற்கைக்கோள் புகைப்படங்கள் காட்டுகிறது.
மேலும், சீனா அங்கு ஹெலிகாப்டர்களை இறக்குவது, ராணுவ தளவாடங்களை நிறுத்துவது உள்பட பல்வேறு நிலைகளுடன் பாதுகாப்பு கட்டமைப்பை எல்லைக்கு மிக அருகாமையில் முன்னெடுத்து உள்ளது என செயற்கைக்கோள் புகைப்படங்களில் அம்பளமாகியுள்ளது. இதனால் ஆளும் மத்திய அரசு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியதாவது, டோக்லாம் பீடபூமியை சீனா ஆக்கிரமித்துவிட்டது. இது மத்திய அரசு தூங்கிக்கொண்டு உள்ளது என்பதை காட்டுகிறது.
தேர்தல்களில் பேசுவதற்கு தேர்ச்சி பெற்ற நம்முடைய பிரதமர், எல்லை பாதுகாப்பை உறுதிசெய்வதில் தோல்வியை தழுவி விட்டார். டோக்லாம் பகுதி முழுவதையும் சீனா ஆக்கிரமிக்கும் வரையில் அரசு என்ன செய்துக்கொண்டு இருந்தது? மத்திய அரசு, பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு இது தெரியுமா? என கேள்வியை எழுப்பியுள்ளார்.