Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலக வாழ்விடம் நாள்: பல்லிகள் இல்லையென்றால் மனிதர்களின் நிலை என்னவாகும்?

Lizard
, திங்கள், 3 அக்டோபர் 2022 (13:51 IST)
இன்று உலக வாழ்விடம் நாள். நாம் பொதுவாக மற்ற உயிர்களின் வாழ்விடமாக காடுகள், மலைகள் என மக்கள் அதிகம் வசிக்காத இயற்கை சார்ந்த பகுதிகளையே நினைக்கிறோம். ஆனால், நாம் வசிக்கும் இடங்களில் நம்மைச் சுற்றி இருக்கும் உயிரினங்கள் பற்றியும் அவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றியும் நாம் அதிகம் சிந்திப்பதில்லை.

நம்மை சுற்றியுள்ள சிற்றுயிர்கள் பல்லுயிர்ச் சூழலுக்கும், நமது மனித வாழ்வுக்கும் ஆற்றும் நன்மைகள் குறித்து நமக்கு பெரிதும் கவனம் இருப்பதில்லை. குறிப்பாக வீடுகளில் உலவும் பல்லிகள் குறித்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் உணர்வு. சிலருக்கு பல்லிகளைப் பார்த்து பயம். வேறு சிலருக்கோ அருவருப்பு. சிலருக்கு சகுணம் போன்ற நம்பிக்கைகளுக்கான வழி.

ஆனால், இவை எல்லாவற்றுக்கும் மேலாக பல்லுயிர்ச் சமநிலையில் அவை ஆற்றும் பணிக்காக அவை பெரிதும் முக்கியத்துவம் பெறுவதில்லை.

பல்லிகள் இல்லையென்றால் நம் வீடுகளில் நிலை என்னவாகும்? பல்லிகளுக்கும் நாம் வாழும் இடத்திருக்கும் உள்ள தொடர்பு என்ன?

இதுகுறித்து பிபிசி தமிழிடம் காட்டுயிர் சூழலியல் ஆர்வலர் ஏ.சண்முகானந்தம் விளக்குகிறார்.

வீடுகளில் பல்லிகள் இருப்பதால் என்ன பயன்?

பூச்சிகளைக் கட்டுபடுத்துவதில் பல்லிகள் பெரும் பங்கு வகிக்கின்றன. உலகம் உயிரினங்களால் சூழப்பட்டது என்று பொதுவாக சொல்கிறோம். ஆனால், இந்த உலகம் பூச்சிகளால் சூழப்பட்டது என்று கூறலாம். அந்த அளவுக்கு இங்கு பூச்சிகளின் எண்ணிக்கை அதிகம். பூச்சிகளே இல்லாத உலகமும், பூச்சிகள் அதீதமாக மிகுதியாக உள்ள உலகமும் நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட பயங்கரமாக இருக்கும். இதனை சமநிலையில் வைத்திருக்க வேண்டும். அதற்கு உதவுகிறவை பல்லிகள்.

உதாரணமாக, பல்லிகள் கொசுக்கள், ஈக்களை உணவாக்கி அவற்றின் பெருக்கத்தை கட்டுப்படுத்துகின்றன. அதே சமயத்தில், பறவைகள் போன்ற மற்ற உயிரினங்களுக்கும் பல்லிகள் உணவாகின்றன. இது உணவு சங்கிலிக்கு உதவுகிறது.

பல்லிகள் என்னென்ன பூச்சி வகைகளைச் சாப்பிடுகின்றன?

பல்லிகள் இரவு நேரத்தில் செயல்படக்கூடிய பூச்சிகளை பெரும்பாலும் உண்ணும். கொசுக்கள், ஈக்கள், தும்பிகள், வண்டுகள், விட்டில் பூச்சி போன்ற வகைகளை சாப்பிடும்.

என்னென்ன பல்லி வகைகள் அதிகமாக மனிதர்களிடையே வாழ்கின்றன?

பொதுவாக மரப் பல்லிகள் மற்றும் வீட்டுப் பல்லிகள் இருக்கும். ஆனால், இதிலும் பல்வேறு வகைகள் இருக்கின்றன. பல்லி வகைகளை ஆவணப்படுத்த வேண்டும். அப்போதுதான், பல்லிகளின் முக்கியத்துவம் குறித்து மனிதர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும்.
webdunia

பல்லி விழுந்தால் விஷம் என்கிறார்களே இது உண்மையா? பல்லிகளால் நமக்கு ஏதாவது பிரச்னைகள் ஏற்படுமா?

பல்லிகளை நாம் பெரும்பாலும் மூடநம்பிக்கைகளுடன் நாம் தொடர்புபடுத்திக் கொள்வோம். பல்லிகளைக் கொண்டு பஞ்சாங்கம் பார்ப்பது, பல்லிகள் உச்சுக்கொட்டுவதை கொண்டு நல்ல நேரம் பார்ப்பது, பல்லி உணவில் விழுந்தால் விஷம் என நினைப்பது இவையெல்லாம் மனிதர்களுக்கு பல்லிகள் பற்றி இருக்கும் கற்பிதங்கள். ஆனால், பல்லி உணவில் விழுந்தால் அது விஷமாகாது. அதற்கு மனிதர்களை கொல்லும் நச்சுத்தன்மை இல்லை. அப்படி எந்த ஆய்வும் உறுதிப்படுத்தவில்லை.

உணவில் பல்லி விழுந்தால், ஒவ்வாமை காரணமாகத்தான் மயக்கம் வாந்தி ஏற்படும். இதனை மருந்துவ சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்.

இதுகுறித்து, மேலதிகாமான ஆய்வுகள்இருக்கும்போது, இன்னும் கூடுதலாக அறிவியல்பூர்வமான செய்திகள் கிடைக்கும்.

பூச்சிகளை கட்டுப்படுத்துவதில் அரணைக்கும் பங்கு உண்டு. ஆனால், அரணைகள் முன்பு போல இப்போது அதிகம் பார்க்க முடிவதில்லையே . என்ன காரணம்?

பொதுவாக நம் வாழ்விடத்தில் இயற்கையான சூழல் இல்லாமல் செய்து வருகிறோம். முன்பு, வீடுகள் இருக்கும் இடங்களில் சின்ன சின்ன தோட்டங்கள் வைப்பது வழக்கமான ஒன்றாக இருந்தது. முன்பு எந்த வீடாக இருந்தாலும், ஏதோ ஒன்று, இரண்டு செடி கொடிகள் இருக்கும்.

அதை சார்ந்து பூச்சி இனங்கள் தேடி வரும். இந்த பூச்சி இனங்களுக்காக பல்லியோ, அரணையோ தேடி வரும். பல்லிகள் இரவு நேரங்கள் இருக்கும் பூச்சிகளை சாப்பிடுவதற்கு வரும். அரணை பகல் நேர பூச்சிகளை சாப்பிடுவதற்கு வரும். இப்போது இப்படியான சூழல் குறைந்து வருவதால், அரணையை அதிகம் பார்க்க முடியாத சூழல் ஏற்படுகிறது.

பல்லிகள் இல்லாத சூழல் உருவானால் என்ன ஆகும்?

பல்லிகள் இல்லாத ஒரு சூழல் உருவானால், பூச்சிகள் அதிகமாகும். அதன்மூலம், பூச்சிகளால் ஏற்படும் பாதிப்புகள் மனிதர்களுக்கு நடக்கும். உதாரணமாக, கொசுக்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது என்று நாம் கவலைப்படுகிறோம். இதற்கு காலநிலை மாற்றமும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

அதே நேரத்தில், அதனை கட்டுப்படுத்த ரசாயன மருந்துகள் பயன்படுத்துகிறோம். இதுவே மனிதர்களுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றது. பல்லிகள் பூச்சிகளின் இயற்கையான இரைவிழுங்கி. அப்படி இருக்கும் பட்சத்தில், பல்லிகள் இல்லாத சூழல், நிச்சயம் மனிதர்களுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராகுல் காந்தி நடைப்பயணத்தில் சோனியா, பிரியங்கா கலந்து கொள்கிறார்களா?