Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காஷ்மீர் அரசியலை மாற்ற கொரோனா வைரஸ் நரேந்திர மோதிக்கு உதவுமா?

காஷ்மீர் அரசியலை மாற்ற கொரோனா வைரஸ் நரேந்திர மோதிக்கு உதவுமா?
, வியாழன், 26 மார்ச் 2020 (10:13 IST)
கொரோனா வைரஸ் பரவல் குறித்த பயம் இந்த உலகை பீடிக்கும் முன்னர் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவதற்கான வழிமுறைகளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தீவிரமாக ஆராய்ந்து வந்தனர்.

2019 ஆகஸ்டு மாதம் ஜம்மு - காஷ்மீர் பிரிக்கப்பட்டு, 1954 முதல் அதற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் காஷ்மீர் முடங்கி கிடக்கிறது. பெரிய அளவில் வன்முறைகள் மற்றும் உயிரிழப்புகள் உண்டாகாத நிலையில், காஷ்மீர் மக்களின் கோபத்தை குறைப்பது, அரசியல் கூட்டாளிகளை அமைத்துக்கொள்வது உள்ளிட்டவையே மோதி அரசின் நோக்கமாக இருந்தன.

தேசிய மாநாட்டு கட்சியின் ஃபரூக் அப்துல்லா, அவரது மகனான உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சியின் மெகபூபா முஃப்தி உள்ளிட்டோர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். இவர்கள் மூவருமே முன்னாள் முதல்வர்கள். இவர்கள் சார்ந்துள்ள இரு கட்சிகளுடனும் கடந்த காலங்களில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி வைத்துள்ளது.
webdunia

தேசிய மாநாட்டு கட்சி 1999இல் பாஜகவுடன் கூட்டணி அமைத்து, அடல் பிகாரி வாஜ்பேயி தலைமையிலான மத்திய அரசில் அங்கம் வகித்தது. பாஜக கூட்டணியுடன் மூன்று ஆண்டுகள் முதல்வராக இருந்தவர் மெகபூபா. பாகிஸ்தான் ஆதரவுடன் இயங்கும் பிரிவினைவாதத்துக்கு எதிராக மென்மையான போக்கை கொண்டுள்ளதாக குற்றம்சாட்டி பாஜக அவருக்கான ஆதரவை 2018இல் விலக்கிக்கொண்டது.
காஷ்மீர் அரசியலின் மூன்று முக்கிய தலைவர்களும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதால் உண்டான வெற்றிடத்தை, மெஹபூபாவின் கட்சியில் இருந்து பிரிந்தவர்கள் நிரப்ப முயன்றனர்.

மக்கள் ஜனநாயக கட்சியில் இருந்து விலகிய அட்லஃப் புகாரி வேறு சில அதிருப்தி தலைவர்கள் மற்றும் ஒத்த கருத்துடைய தலைவர்களுடன் இணைந்தார். அவர் தொடங்கிய 'அப்னி கட்சி' மோதி மற்றும் அமித் ஷாவின் ஆதரவை பெற்றது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கும் சில நாட்களுக்கு முன் ஃபரூக் அப்துல்லா தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார். அனைத்து அரசியல் கைதிகளும் விடுவிக்கப்படும் வரை அரசியல் பேசுவதை தவிர்க்க அவர் முடிவு செய்தார்.

கொரோனா பரவலின் தீவிரம் அதிகரித்த சூழலில் மார்ச் 24ஆம் தேதி உமர் அப்துல்லா விடுவிக்கப்பட்டார்.கொரோனா பிரச்சனை தீரும் வரை காஷ்மீர் சூழ்நிலை குறித்து எதுவும் பேசப்போவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

மெகபூபாவும் விரைவில் விடுதலை செய்யப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போதைய கொரோனா பரவல் சூழலுக்கு மத்தியில் அரசியல் கைதிகள் விடுதலை மற்றும் அவரது அரசியல் நிலைப்பாட்டை கலப்பது அவருக்கு பாதகமாகவே அமையும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

"காஷ்மீரில் அரசியல் பதவிகளைப் பெற இந்திய அரசுடன் அனுசரித்து நடந்துகொள்வது இங்கு வழக்கமானது. அப்துல்லாக்கள் மற்றும் மெகபூபா ஆகியோர் இந்திய அரசுடன் அப்படி ஏதேனும் ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளனரா என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. உமர் மற்றும் மெஹபூபாவின் தற்போதைய அமைதி நியாயமாகத் தெரிந்தாலும் மோதி மற்றும் அமித் ஷாவின் அரசியல் முயற்சிகள் சத்தமின்றி பலனளிப்பதாகவே தெரிகிறது," என்கிறார் அரசியல் விமர்சகர் இஜாஸ் ஆயூப்.

"உலகம் முழுவதும் நோய் பரவல்கள் மூலம் உண்டாகும் உணவுகள் அரசியல் சூழலை மாற்றும் வகையிலேயே அமைந்துள்ளன. கடந்த எட்டு மாதமாக நிலவிய காஷ்மீர் தன்னாட்சி குறித்த விவாதத்தை கொரோனா நோய் பரவல் பின்னுக்கு தள்ளியுள்ளது. காஷ்மீர் பிரச்சனை பெரிதாக கவனிக்கப்படாத நிலையில், தடுப்புக் காவலில் உள்ள தலைவர்களை விடுவிக்க மோதி அரசுக்கு இது ஒரு தங்கமான வாய்ப்பு ," என்கிறார் அவர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் மட்டும் கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கை மீறியதற்காக நூற்றுக்கணக்கானோர் கைதாகியுள்ளனர்.

தனிமைப்படுத்தல் மையங்களில் சுமார் 5000 பேரின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

காஷ்மீர் பிராந்திய தேசியவாத உணர்வுகளில் இருந்து இந்திய ஒன்றியத்தை ஏற்றுக்கொள்ளும் கருத்துக்கு காஷ்மீர் அரசியலை மாற்றும் முயற்சிகளுக்கான வழிகளை இந்திய அரசு கண்டுகொண்டுள்ளது. எனினும் இதுதான் இறுதியானது என்று எதுவும் கூற இயலாது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

"இந்தியா மற்றும் காஷ்மீரில் கொரோனா பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கும், அது பிராந்திய அரசியல் பிரச்சனைகளில் இருந்து எந்த அளவுக்கு கவனத்தை திசைதிருப்பும் என்பதிலும், தடுப்புக் காவலில் இருந்து வெளிவரும் அரசியல் தலைவர்கள் எந்த அளவுக்கு சமரசம் செய்துகொண்டு, புதிய முழக்கங்களை முன்வைக்கப்போகிறார்கள் என்பதிலுமே காஷ்மீரின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு முடிவு செய்யப்படும்," என்கிறார் காஷ்மீர் ஊடகவியலாளர் தாரிக் அலி மிர் .

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு டவுட்டு...! கொசுக்களால் கொரோனா பரவுமா??