நூதலபாடி வேங்கட ரமணா (என்.வி.ரமணா) 48-வது இந்தியத் தலைமை நீதிபதியாக இன்று சனிக்கிழமை (24 ஏப்ரல் 2021) காலை பொறுப்பேற்றுள்ளார்.
இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்துவந்த எஸ்.ஏ.பாப்டே நேற்றுடன் ஓய்வு பெற்றதை அடுத்து அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார் ரமணா.
இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ரமணாவுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
பிரதமர் நரேந்திர மோதி, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஓராண்டு நான்கு மாதங்கள் ரமணா இந்தப் பதவியில் இருப்பார். ஆகஸ்ட் 26, 2022 அன்று அவர் ஓய்வு பெறுகிறார்.
யார் இந்த நீதிபதி ரமணா?
1957ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி என்.வி.ரமணா ஆந்திரப் பிரதேச மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பொன்னாவரம் என்ற ஊரில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.
1983 பிப்ரவரி 10ம் தேதி அவர் வழக்குரைஞர் பணியைத் தொடங்கினார். 2017 பிப்ரவரி 2ம் தேதி அவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். சந்திரபாபு ஆந்திரப் பிரதேச முதல்வராக இருந்தபோது அம்மாநிலத்தின் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக இருந்தார்.
பி.எஸ்சி. பி.எல். படித்த அவர் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் வழக்குரைஞராகப் பணியாற்றிய அவர், பல அரசு முகமைகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட வழக்குரைஞர்கள் பட்டியலில் இடம் பெற்றவர். 2000ம் ஆண்டு ஜூன் 27ம் தேதி ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
அதே நீதிமன்றத்தின் தற்காலிகத் தலைமை நீதிபதியாக 2013ல் ஓரிரு மாதங்கள் பணியாற்றினார். பிறகு டெல்லி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்று சென்றார். அதையடுத்து அவர் உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார்.
ஜெகன்மோகன் எழுப்பிய சர்ச்சை
சிறிது காலம் முன்பு உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணாவுக்கு எதிராக அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார் ஆந்திரப்பிரதேச முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி.
அந்த 8 பக்க கடிதத்தில் என்.வி.ரமணா மாநில நிர்வாக விவகாரங்களில் தலையிடுவதாகவும், அவருக்கும் ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும் இடையிலான நெருக்கம் நன்கு அறிந்த விஷயம் என்றும் ஜெகன்மோகன் ரெட்டி கூறியிருந்தார்.