ஈஸ்டர் தாக்குதலின் 2ம் வருட பூர்த்தியை முன்னிட்டு, தாக்குதலில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து, இலங்கை முழுவதும் பல்வேறு நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, முதலாவது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட கொழும்பு - கொச்சிகடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் பிரதான நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறுகின்றது.
இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து, விசேட திருப்பலி ஒப்புக்கொடுத்தலும், கொழும்பு - கொச்சிகடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெறுகின்றது.
நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி போலீஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
அதேபோன்று, கொழும்பு - கொச்சிகடை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வாகன போக்குவரத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
'இன்றும் மனதால் ஏற்றுக்கொள்ள முடியாது'
இவ்வாறான நிலையில், ஈஸ்டர் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தை தேடி, பிபிசி தமிழ் சென்றது.
கொழும்பு - முகத்துவாரம் பகுதியில் வாழ்ந்துவரும் பீ.ஜே.கோமஸ், தனது மகன் உள்ளிட்ட மகனின் முழு குடும்பத்தையும், இந்த தாக்குதலில் இழந்த நிலையில், இன்றும் மிகுந்த மனவேதனையுடன் வாழ்ந்து வருகின்றார்.
இந்த தாக்குதலில் 33 வயதான பேலிங்டன் ஜோசப் கோமல், அவரது மனைவியான 30 வயதான சந்திரிகா ஆறுமுகம், அவர்களது குழந்தைகளான 10 வயதுடைய பேலிங்டன் ஜோசப் பேவோன், 06 வயதான பேலிங்டன் ஜோசப் கிளவோன் மற்றும் 11 மாதங்களேயான பேலிங்டன் ஜோசப் ஹேவோன் ஆகியோர் உயிரிந்துள்ளனர்.
2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி, ஈஸ்டர் ஞாயிறு தினத்தை முன்னிட்டு, பேலிங்டன் ஜோசப் கோமல் தனது குடும்பத்தாருடன், கொழும்பு - கொச்சிகடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனை நிகழ்வுகளில் கலந்துக்கொண்டார்.
தனது மகன் மற்றும் மகனின் குடும்பத்தார் தேவாலயத்தில் இருந்த இடத்தில்தான், தற்கொலை குண்டுத்தாரி, குண்டை வெடிக்க செய்ததாகவும் அவர் கூறுகிறார்.
இந்த தாக்குதலில் தனது மகனின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அதே இடத்தில் உயிரிழந்தனர் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
தனது மகன் தேவாலயத்திற்கு சென்ற நிலையில், அங்கு குண்டு வெடிப்பு இடம்பெற்றதை கேள்வியுற்ற தான், உடனடியாக தேவாலயத்தை நோக்கி சென்றதாக அவர் தெரிவிக்கின்றார்.
எனினும், பாதுகாப்பு பிரிவினர் தன்னை உள்ளே செல்ல அனுமதிக்காத நிலையில், தான் வைத்தியசாலைகளுக்கு சென்று, மகனையும், மகனின் குடும்ப உறுப்பினர்களையும் தேடியதாக அவர் கூறுகின்றார்.
இவ்வாறான நிலையில், 11 மாதங்கள் நிரம்பிய தனது மகனின் குழந்தையை தான் முதலில் அடையாளம் கண்டுக்கொண்டதாகவும், அதன் பின்னர், தனது மகன் மற்றும் அவரது மனைவி ஆகியோரை அடையாளம் கண்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
எனினும், தனது மகனின் மூத்த இரண்டு குழந்தைகளின் சடலங்களையும் அடையாளம் கண்டுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதாக அவர் கூறுகின்றார்.
அதன்படி, மகன், மருமகள் மற்றும் அவர்களின் கடைசி குழந்தை ஆகியோரின் சடலங்களை முதலில் தம்மிடம் கையளித்ததாக கூறிய அவர், அவர்களின் இறுதிக் கிரியைகளை முதலில் நிறைவு செய்ததாகவும் தெரிவிக்கின்றார்.
அதன்பின்னர், தனது மகனின் இரண்டாவது புதல்வரின் சடலம், தமக்கு 3 மாதங்களின் பின்னரும், மூத்த குழந்தையின் சடலம் 6 மாதங்களின் பின்னரும் கிடைத்ததாக அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த தாக்குதலில் உயிரிழந்த தனது மகன் மற்றும் அவரது குடும்பத்தார் தேவாலயத்தில் வைத்தே, புனித நிலையை அடைந்துள்ளதாக கூறும் அவர், தனது மகனின் இழப்பை இன்றும் மனதால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கின்றார்.
இந்த தாக்குதல் தொடர்பில் இன்று வரை தமக்கான நீதி கிடைக்கவில்லை எனவும், அந்த நீதி என்றாவது ஒரு நான் இறைவனிடமிருந்து கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் வாழ்ந்து வருவதாகவும் அவர் கூறுகின்றார்.
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு மன்னிப்பு வழங்க தான் தயாராகவே உள்ளதாகவும், தாக்குதலில் தனது மகன் மற்றும் அவரது குடும்பத்தையே இழந்து தவிக்கும் பீ.ஜே.கோமஸ், பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
எனினும், மன்னிப்பு வழங்க தான் தயாராக இருக்கின்ற போதிலும், அந்த மன்னிப்பை யாருக்கு வழங்குவது என்பதே இன்றும் கேள்வியாக உள்ளதென அவர் கூறுகின்றார்.
இந்த தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் முன்வருவார்களேயானால், அவர்களுக்கு எந்த சந்தர்ப்பத்திலும் மன்னிப்பு வழங்க தான் தயார் என பீ.ஜே.கோமஸ் தெரிவிக்கின்றார்.
''நாங்க இந்த சம்பவத்துல, தனிப்பட்ட முறையில சொல்லுறேன், நாங்க மன்னிக்க தயாரா இருக்குறோம். ஆனால், யார மன்னிக்குறது? ஆள் தெரியாதே? சரியான முறையில அவங்க மனசாட்சிப்படி நடந்துக்கொண்டா, நாங்க அவங்கள மன்னிக்க தயாரா இருக்குறோம். எங்கட பெரியவரு, சமய தலைவர், மெல்கம் ரஞ்ஜித் அவர்கள் சொல்லுறதும் அது தான்.
ஆரம்ப காலத்துல அவரு ஒரு நோக்கத்துல இருந்தாலும், இப்ப அவருக்கு தெளிவு ஏற்பட்டிருக்கு. அவரும் அந்த இடத்தில தான் நிக்குறாரு. நாங்க மன்னிக்க தயார். மன்னிப்பு தான் ஜேசு வழி தோன்றல். மன்னிப்பு தான் எங்களால் கொடுக்கலாம். ஆனால் மன்னிப்பு கொடுக்க அவரு முன்னுக்கு வரனும்" என பீ.ஜே.கோமஸ் தெரிவித்தார்.
இலங்கை ஈஸ்டர் தாக்குதல்
இலங்கையில் 2019ம் ஆண்டு 277 பேரின் உயிர்களை காவுக்கொண்ட ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு, இன்றுடன் 2 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி இலங்கையிலுள்ள பிரதான கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இந்த தாக்குதலில் 277 பேர் உயிரிழந்திருந்ததுடன், 400ற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்ததாக ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை நடத்திய நாடாளுமன்றத் தெரிவு குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
தாக்குதலில் உயிரிழந்தவர்களில் சுமார் 40 வெளிநாட்டவர்களும், சுமார் 45 சிறுவர்களும் அடங்குவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டு, இன்றுடன் (21) 2 வருடங்கள் பூர்த்தியாகின்றன.