Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காலியான ஆக்சிஜன் - ஆபத்தான கட்டத்தில் நோயாளிகள் - கதறி அழும் மருத்துவர்கள்

காலியான ஆக்சிஜன் - ஆபத்தான கட்டத்தில் நோயாளிகள் - கதறி அழும் மருத்துவர்கள்
, வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (15:32 IST)
இந்திய தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் உள்ளிட்ட நோய் குறைபாடுகளுக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், தங்களின் மருத்துவ குறைபாடுகளுடன் சேர்த்து, ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிருக்கு ஆபத்தான கட்டத்தை எதிர்கொண்டுள்ளனர்.

அங்குள்ள மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று வியாழக்கிழமை மாலையில் நடந்த இரண்டாம் நாள் விசாரணையில் டெல்லி உயர் நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.

ஆனாலும், அந்த உத்தரவு வெளிவந்த அடுத்த சில நிமிடங்களிலேயே பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் அளவு காலியானது.

டெல்லியில், திரத் ராம் ஷா மருத்துவமனை, யுகே நர்சிங் ஹோம், ரதி மருத்துவமனை, சாந்தோம் மருத்துவமனை உள்ளிட்டவற்றில் ஆக்சிஜன் காலியாகி விட்டதாக டெல்லி அரசு கூறியது.

இது தவிர, ஹோலி ஃபேமிலி மருத்துவமனையில் நேற்று கடும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வந்த நிர்வாகம், வியாழக்கிழமை வெறும் இரண்டரை மணி நேர பயன்பாட்டுக்குரிய ஆக்சிஜன் அளவை மட்டுமே கொண்டிருந்தது.

முன்னதாக, மாநிலத்தின் தேவைக்காக டெல்லிக்கு தேவைப்படும் 700 மெட்ரிக் டன் அளவு ஆக்சிஜனை ஒதுக்குமாறு மத்திய அரசை டெல்லி அரசு கேட்டுக் கொண்டிருந்தது. இருப்பினும், 500 மெட்ரிக் டன் அளவு மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியது.

ஆனாலும், ஒதுக்கப்பட்ட அந்த அளவு ஆக்சிஜனை பெறுவதிலும் பெரும் சிரமம் இருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டினார்.

தலைநகரில் உடனடி தேவைக்கு ஆக்சிஜன் தேவை என்றால் அதை மேற்கு வங்கம், ஒடிஷா போன்ற இடங்களில் இருந்து கொள்முதல் செய்ய அரசு அறிவுறுத்தியது நடைமுறையில் உயிருக்கு போராடும் நோயாளிகளை காக்க உதவுமா என்று முதல்வர் கேஜ்ரிவால் கேள்வி எழுப்பினார்.

இதேவேளை, நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதிய மத்திய உள்துறை செயலாளர், ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சமாளிக்க அதன் போக்குவரத்தை எந்த வகையிலும் மாநிலங்கள் தடை செய்யக்கூடாது என்று உத்தரவிட்டார்.

நோய் எதிர்ப்புத்திறனை பெருக்க உதவுவதாக நம்பப்படும் ரெம்டெசிவீர் மருந்தை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் மாநிலங்களுக்கு அனுப்பிய கடிதத்தல் கேட்டுக் கொண்டார்.

ஆக்சிஜன் வழங்க வேண்டுகோள் விடுக்கும் எம்எல்ஏ

இதற்கிடையே, டெல்லியில் கிரேட்டர் கைலாஷ் தொகுதி எம்எல்ஏ செளரவ் பரத்வாஜ், கொரோனா தொற்று பாதிப்புடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அங்கு தீவிச சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள அவர், ஆக்சிஜன் வழங்கி உதவிடுமாறு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

தனது மூக்கில் மாட்டப்பட்டுள்ள ஆக்சிஜனை எடுத்தால் மூச்சு விடவே சிரமப்படுவதாகவும், அது நீச்சல் தெரியாதவன் நீச்சல் குளத்தில் இறங்கும்போது ஏற்படும் நிலையை போன்றது. எனவே, தயவு செய்து கருணை காட்டுங்கள். மத்திய அரசும், ஹரியாணா அரசும் இந்த விஷயத்தில் பிடிவாதம் காட்டக்கூடாது. பலரும் நீங்கள் தரும் ஆக்சிஜனை நம்பி இருக்கிறார்கள். எல்லோரும் இணைந்து செயல்பட வேண்டிய நேரமிது. யாரும் யாருடைய காலையும் பிடித்து வாரிவிடக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்தார்.

இது ஒருபுறமிருக்க, டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தனது தாத்தாவின் சிகிச்சைக்கு நொய்டாவில் உள்ள ஷார்தா மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைக்காமல் அதன் முன்பாக மணிக்கணக்கில் காத்திருந்தபோது தனது தாத்தாவின் உயிர் பிரிந்து விட்டதாக தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்த நிலையில், டெல்லியில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தால் 1,500 காவலர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பதாக டெல்லி கால்துறை தலைமையகம் தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்தது.

இதேவேளை, ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டர், "கடந்த இரண்டு நாட்களாக ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நிலவும் பிரச்னையை சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹரியாணாவில் உள்ள 12 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் மூலம் 480 மெட்ரிக் டன் அளவுக்கு ஆக்சிஜன் டெல்லிக்கு விநியோகம் செய்யப்படும். தங்களுக்கான ஒதுக்கீடு அடிப்படையில் தேவையான அளவை வழங்குமாறு விநியோக நிலையங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன," என்று தெரிவித்தார்.

கதறி அழுத மருத்துவர்

டெல்லியின் ஷாந்தி முகந்த் மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி சுனில் சாகர், "ஒரு மருத்துவராக எங்களால் உயிரைத்தான் காப்பாற்ற முடியும். எங்களால் ஆக்சிஜனை தர முடியாது. டெல்லியில் நிலைமை மிகவும் மோசமாகிக் கொண்டே வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் ஆக்சிஜன் கிடைக்காவிட்டால் பல உயிர்கள் போகும் ஆபத்து உள்ளது," என்று கூறினார்.

இங்கு போதுமான அளவுக்கு ஆக்சிஜன் இல்லை. கிடைக்கும் சிலிண்டர் அனைத்தையும் தீவிர சிகிச்சை பிரிவு படுக்கை வசதிகளில் சிகிச்சை பெறுவோருடன் இணைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று சுனில் சாகர் கூறினார்.

ஒரு கட்டத்தில் தலைநகரில் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை வழங்க முடியாத நிலைக்கு மருத்துவர்கள் தள்ளப்பட்டதை விவரிக்கும்போது அவர் அழத் தொடங்கினார்.

டெல்லியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு தடுப்பூசி கையிருப்பில் இருப்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கை ஒருபுறமிருக்க, தற்போது ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது மிகவும் அவசியமானதாக கருதப்படுகிறது. இதனால் தலைநகரில் உள்ள பலரும் தங்களுக்கு எந்தெந்த வாய்ப்புகளில் எல்லாம் ஆக்சிஜன் சிலிண்டர் கிடைக்கிறதோ அதை எல்லாம் அரசிடம் ஒப்படைக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

துணை ராணுவப்படை உதவியுடன் படுக்கை வசதிகள்

கொரோனா முதலாம் அலையின்போது இந்திய திபெத்திய எல்லை காவல் படை முகாம் அமைந்த சத்தர்பூரில் தற்காலிக மருத்துவ நிலையம் அமைக்கப்பட்டிருந்தது. கொரோனா தாக்கம் குறைந்த பிறகு மூடப்பட்ட அந்த நிலையம், மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அங்கு 500 படுக்கை வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

கலக்கத்தில் மருத்துவமனை

இன்று 8 மணி நிலவரப்படி, தங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ள ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஐந்து மணி நேரத்துக்கு மட்டுமே செயல்படும் என்றும் அதுவும் அதிக ஆக்சிஜன் சீரோட்டமில்லாத வகையில் வைத்திருந்தால் கூட நள்ளிரவைக் கடந்த 1 மணிக்கு மேல் அது நீடிக்காது என்று கங்காராம் மருத்துவமனை தெரிவித்துள்ளது. அந்த மருத்துவமனையில் 142 பேர் ஆக்சிஜன் தேவையுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 24,000 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 249 பேர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2 மாதங்களுக்கு 5 கிலோ தானியங்கள் இலவசம்: பிரதமர் மோடி உத்தரவு