"வாழ்வா, சாவா" என பெரும் போராட்டத்துக்கிடையில், சரிவை சந்தித்து வரும் வடகொரியாவின் பொருளாதாரத்தை சீரமைப்பதற்கே இந்தாண்டில் தேசியளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என, வட கொரியா அதிபர் கிம் ஜோங்-உன் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சி கூட்டத்தின்நிறைவு கூட்டத்தில் வெள்ளிக்கிழமை அவர் உரையாற்றினார், அதேசமயம், ஆட்சியில் அமர்ந்து 10 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கொரோனாவால் ஏற்பட்ட தடைகளால், வட கொரியா உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
அவருடைய உரையில் அமெரிக்கா குறித்தோ தென் கொரியா குறித்தோ நேரடியாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.
வளர்ச்சியை அதிகரிப்பது மற்றும் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது முக்கியமான பணி என கிம் தமது உரையில் தெரிவித்தார்.
2021ஆம் ஆண்டில் "கடினமான சூழல்" நிலவியதை ஒப்புக்கொண்ட அவர், "உணவு, உடை மற்றும் வீட்டு பிரச்னையைத் தீர்ப்பதில் தீவிர முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கான முக்கியமான செயல்திட்டத்தை" அமைத்ததாக கூறினார் என்று அரசின் அதிகாரப்பூர்வ கொரியன் சென்ட்ரல் நியூஸ் ஏஜென்சி (கேசிஎன்ஏ) செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக போராடுவது இந்த ஆண்டின் முக்கிய இலக்காக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்: "அவசரகால தொற்றுநோய் தடுப்புப் பணிகளுக்கு, முன்னுரிமை கொடுக்க வேண்டும்," என அவர் தெரிவித்ததாக கேசிஎன்ஏ செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், கொரிய தீபகற்பத்தில் வளர்ந்துவரும் நிலையற்ற ராணுவச் சூழல் காரணமாக, வடகொரிய அரசு தனது பாதுகாப்புத்திறனை தொடர்ந்து வலுப்படுத்திக்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.
கிம் ஜோங் - உன்
திங்கட்கிழமை தொடங்கிய கொரிய தொழிலாளர் கட்சியின் 8-வது மத்தியக்குழுவின் 4-வது மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில், கிம் உரையாற்றினார்.
2021-ம் ஆண்டின் தொடக்கத்தில், வடகொரிய மக்கள் பசியால் பாதிக்கப்பட்டதாக அறிக்கைகள் வெளியாகின. இது, குளிர்காலம் நெருங்கிவந்த நிலையில், முழுமையான உணவு நெருக்கடி குறித்த கவலைகள் அதிகரிக்க வழிவகுத்தது.
சீனாவில் இருந்து கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க ஜனவரி 2020 முதல் வடகொரிய எல்லை மூடப்பட்டுள்ளது.
வடகொரியாவின் பொருளாதார இன்னல்கள்
வடகொரியாவின் மோசமான பொருளாதார நிலை மற்றும் உணவுப் பற்றாக்குறை குறித்து அந்நாட்டு அதிபர் கிம் ஜோங்-உன் தொடர்ந்து வலியுறுத்தி வந்த ஓராண்டைத் தொடர்ந்து, ஆளும் தொழிலாளர் கட்சியின் கூட்டத்திலும் இது குறித்த சவால்கள் மீண்டும் கவனத்தில் கொள்ளப்பட்டன.
2022-ல் கிம் குறிப்பிட்ட "வாழ்வா சாவா எனும் பெரும் போராட்டம்" பற்றிய எச்சரிக்கை, 1990களில் வடகொரியாவின் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி மற்றும் பஞ்சத்தைக் குறிப்பிடும் மற்றொரு "கடினமான அணிவகுப்புக்கு" தயாராகுமாறு அதிகாரிகளை வலியுறுத்திய கடந்த ஏப்ரல் மாத உரையை எதிரொலிக்கிறது.
இத்தகைய ஒப்பீடுகள் நிலைமையை மிகைப்படுத்திக் காட்டினாலும், கொரோனா தொடர்பான எல்லை மூடல்கள், சர்வதேசத் தடைகள் மற்றும் இயற்கை பேரிடர்கள் காரணமாக, வடகொரியாவின் பொருளாதார இன்னல்கள் உண்மையிலேயே தீவிரமடைந்துள்ளன.
இவை அனைத்தும் கிம் கடந்த ஜூன் மாதம் குறிப்பிட்ட "கடுமையான" உணவு நெருக்கடிக்கு பங்களித்துள்ளன. மேலும், சர்வதேச முகமைகளும் வளர்ந்துவரும் உணவு பாதுகாப்பின்மை மற்றும் பட்டினி குறித்து எச்சரிக்கின்றன.
பொருளாதார நெருக்கடி மட்டுமல்லாது இயற்கை பேரிடர்களும் வடகொரியாவை தொடர்ந்து பாதித்து வருகின்றன.
பொருளாதார நெருக்கடி மட்டுமல்லாது இயற்கை பேரிடர்களும் வடகொரியாவை தொடர்ந்து பாதித்து வருகின்றன.
தேசிய பொருளாதாரத் திட்டத்தைச் செயல்படுத்துதல், கிராமப்புற மேம்பாடு மற்றும் "விஞ்ஞான முறையிலான விவசாயத்தை" முன்னேற்றுதல் ஆகியவற்றில் கிம் அளித்துள்ள முக்கியத்துவம், இப்போது தங்கள் தலைவர் தங்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கிறார் என நாட்டு மக்களுக்கு நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது.
கிம்மின் புத்தாண்டு உரைகளில் முன்னர் தென் கொரியா மற்றும் அமெரிக்காவுக்கான செய்திகள் சேர்க்கப்பட்டிருக்கும், ஆனால், இம்முறை வெளிப்படையான குறிப்புகள் எதுவும் இல்லை.
"கிம் ஜோங்-உன்னின் வருடாந்திர புத்தாண்டு உரைக்கு மாற்றாக இந்த உரையை கருதினால், இது கொரிய நாடுகளுக்கிடையேயான உறவுகள் மற்றும் வெளியுறவுக் கொள்கையின் மிகக் குறுகிய குறிப்பு எனலாம்," என செஜோங் நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் ச்சியோங் சியோங்-சங் என்.கே.நியூசிடம் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு இறுதியில் வட மற்றும் தென் கொரியா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகியவை, முடிவடைந்த கொரிய போருக்கு அதிகாரப்பூர்வ முடிவை அறிவிக்க கொள்கையளவில் ஒப்புக்கொண்டன. ஆனால், வடகொரியாவின் கோரிக்கைகள் காரணமாக, பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படவில்லை என தென் கொரியா தெரிவித்துள்ளது.